தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி… அரசின் புதிய திட்டம் என்ன?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில், குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், வயிற்றுப்போக்கு, தட்டம்மை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட 12 பாதிப்புகளுக்கு, இத்தகைய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையம் – மாதிரி படம்

இந்தத் தடுப்பூசிகள், தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் போடப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகள் போடப்பட்டாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், குழந்தைகளுக்குச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை இனி தாய்மார்கள் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெறலாம். இதற்கான புதிய திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில், “பிறந்த குழந்தைக்கு, முதல் மாதத்தில் இருந்து 18 வயது வரை, 16 தவணைகளாக அரசால் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இனி இவற்றை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகப் பெறலாம். இதற்கான புதிய திட்டத்தை விரைவில் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்

தடுப்பூசிகளைச் சேமித்து வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளைக் கண்டறிந்து, அதன் நிர்வாகங்களிடம் அரசுத்தரப்பு பேச்சு நடத்தி வருகிறது.

எந்தவிதக் கட்டணமும் பெறாமல் இலவசமாக தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசின் நிபந்தனைகளை ஏற்கும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.