நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை டி.எஸ்.பி.எஸ்.சி (TNPSC) நிர்வாகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில், தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிக்கு, `சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். அல்லது, தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு. மேற்படி கல்வித் தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் என்றும் இதுதான் திராவிட மாடலா என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில், “சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா?
அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா? அதுமட்டுமன்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் ‘தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக் கூடாது’ என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுக்காலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத் தமிழை அகற்ற தி.மு.க அரசு முனைவது பெருங்கொடுமையாகும்.
இதுதான் தி.மு.க அரசு தமிழை வளர்க்கும் முறையா? எனவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.