அண்மைக்காலமாக சேலம் மாவட்டம், போதைக் கும்பலின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்துவந்தனர். இந்தச் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி, 27.06.2024-ம் தேதி சேலம் மாநகரில் நடந்த ஒரு சம்பவம்தான். அன்றிரவு போலீஸார் இரவு ரோந்துக்குச் சென்றபோது, சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் ஏகப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருப்பதைக் கண்ட போலீஸார், அவற்றைக் கைப்பற்றினர். விசாரணையில் அந்த மாத்திரைகளை போதைக்காக அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பிடிப்பட்ட மூவருமே, 22 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பதுதான் இதில் மிகப்பெரிய அதிர்ச்சியே!
இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் விற்பனைக்கு பயன்படுத்தியது, கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சேலம், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெரியார் நகரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, அர்ஜுனன் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கைதுசெய்ததுடன், இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணி, ரமேஷ் உட்பட 11 பேரைக் கைதுசெய்தனர்.
இந்த நிலையில் சேலம் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு, போதைக்காக வலி நிவாரணி மாத்திரையை விற்பனை செய்துவந்த செல்வராஜ் எனும் நபர், தன்னுடைய கூட்டாளி சேலம் மணி கைதானவுடன், போலீஸ் தன்னை நெருங்குவது தெரிந்து தலைமறைவாக இருந்துவந்தார். இத்தகைய சூழலில், சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவின் குமார் அபினபு ஆணைக்கிணங்க, துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் ஹரி சங்கரி தலைமையில் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவலர்களைக்கொண்ட தனிப்படை போலீஸார் செல்வராஜைக் கைதுசெய்ய தீவிரம் காட்டிவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கோவையிலிருந்த செல்வராஜ், தனிப்படை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக சேலம் டவுன் காவல் உதவி ஆணையர் ஹரி சங்கரியிடம் பேசியபோது, “சமீபகாலமாக வலி நிவாரணி மாத்திரைகளைக்கொண்டு இளைஞர்கள் போதை ஏற்றிவருவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து மாநகர துணை ஆணையரின் உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு எப்படி இந்த மாத்திரைகள் கிடைக்கின்றன என்பதை ரகசியமாக கவனித்துவந்தோம். இந்த நிலையில்தான் சம்பந்தப்பட்ட போதைக் கும்பல் இரவு நேரங்களில் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.
இரவு ரோந்தின்போது சிக்கிய மூன்று இளைஞர்களைக்கொண்டு விசாரணையைத் தொடங்கிச் சென்றபோது, அதில் மெடிக்கல்களுக்கு மருந்து விற்பனை செய்கின்ற விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில், முக்கிய நபர்களைப் பிடித்து விசாரித்ததில், சில மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்றது தெரியவந்து. அதையடுத்து, அந்த மெடிக்கல்கள்மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதில், முக்கிய மூளையாகச் செயல்பட்ட கோவையைச் சேர்ந்த மருந்து வியாபாரி செல்வராஜ் குறித்தும் தெரியவந்தது. அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது, அவர் செல்போனை அணைத்து வைத்துவிட்டு, வெவ்வேறு எண்களில் பேசிவந்தார். அதைக் கண்டறிந்து கோவை மாவட்டக் காவல்துறையினரின் உதவி மூலம் சம்பந்தப்பட்ட நபரை, அவருக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து கைதுசெய்திருக்கிறோம். செல்வராஜைக் கைதுசெய்ததன் மூலம் ஆறு மாவட்டங்களுக்கு, போதை மாத்திரைகள் செல்வது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்கள் போதைப்பொருள்கள் குறித்த தகவல்களை 90872-00100 என்கிற எண்ணுக்குத் தெரிவித்தால், புகார் தெரிவிப்போர் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது குறித்து சேலம் மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மாரிமுத்துவிடம் பேசியபோது, “சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்பேரில், மருந்துக்கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை சேலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் மருந்து வழங்கியதற்காகவும், சரியாக பில்களை பராமரிக்கத் தவறியதற்காகவும் சம்பந்தப்பட்ட ஐந்து மருந்துக்கடைகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் குறித்த தகவலை 96777 45516 என்கிற தொலைபேசி எண்ணுக்குத் தகவல் அளித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் குட்கா போன்ற போதைப்பொருள்களின் ஊடுருவல் குறித்தும், அதைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கும் முன்னேற்பாடுகள் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவனிடம் பேசியபோது, “குட்கா என்பது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை எளிமையாகக் கிடைக்கக்கூடிய போதைப்பொருள். இதைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போதைப்பொருள்கள் தடுப்புப் பிரிவினர் எனப் பலர் அடங்கியிருக்கின்றனர். சேலம் மாவட்டத்திலிருக்கும் அனைத்து மளிகைக்கடைகள், டீக்கடைகள் போன்றவற்றை ஆய்வுசெய்து குட்கா ஒழிப்பில் ஈடுபட்டுவருவதுடன், வெளிமாநிலங்களிலிருந்து சேலத்துக்கு வரக்கூடிய போதை வஸ்துகளைப் பிடிக்கும் வேலைகளையும் இந்தக் குழு செய்துவருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் வாரம்தோறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டு பதிவுசெய்வார். மேலும், இது போன்ற போதைப்பொருள்கள் ஊடுருவலைத் தடுக்க பொதுமக்கள் தாமாக முன்வந்து தகவலும் அளித்துவருகின்றனர். அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன’’ என்றார்.