“பாஜக-வை சமூக நீதி இயக்கமென எங்கேயும் சொல்லவில்லையே..!” – திலகபாமா `நறுக்’

“அ.தி.மு.க ஒருங்கிணைய வேண்டும் என்ற குரல் மீண்டும் வலுவடைந்திருக்கிறது. இதனை பா.ம.க எப்படி பார்க்கிறது?”

“சட்ட ரீதியாக அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி இரட்டை சின்னத்தை உறுதிசெய்திருக்கலாம். ஆனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பதை மறுக்க முடியாது. ஒன்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் தொண்டர்களில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என பிரிந்து கிடக்கிறார்களா இல்லையா? இந்த பிளவுகள் தி.மு.க-வுக்கு சாதகமாக போகிறது. தி.மு.க-வை வீழ்த்துவதற்காகவாவது அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும்”

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்

“ஒருவேளை ஒருங்கிணைந்த அ.தி.மு.க உருவானதும், பா.ம.க அவர்களுடன் கூட்டணி அமைக்குமோ?”

“ஆருடம் சொல்வதற்கு நான் தயாராக இல்லை. மேலும் தேர்தல் கூட்டணிக் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் என்னிடமில்லை”

“தி.மு.க கூட்டணி வெற்றிகரமாக தொடர்கிறது.. பா.ம.க நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லையே ஏன்?”

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

“தி.மு.க கூட்டணியில் புகைச்சல் தொடங்கிவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்குள் அந்த கூட்டணி உடையும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் உடலை கேட்ட இடத்தில் அடக்கம் செய்ய தி.மு.க அரசு அனுமதி வழங்கவில்லை. பட்டியல் சமூகத்தினர் மீது அக்கறை கொண்ட கட்சி தி.மு.க அல்ல என்பதை வி.சி.க புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரமும் தி.மு.க கூட்டணியில் இல்லை.”

“பா.ஜ.க-வை அ.தி.மு.க கழற்றிவிட்ட போதும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உறுதுணையாக இருந்தது பா.ம.க-தான்… ஆகையால் மத்திய அமைச்சரவையில் அன்புமணி ராமதாஸுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் இருப்பதை மறுப்பீர்களா?”

ராமதாஸ், மோடி, அன்புமணி

“ஒரு கட்சியில் மாற்றுக் கருத்துகளையும், தங்கள் விரும்புவதையும் வெளிப்படுத்துவது இயல்புதான். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் தன்னை முழுமையாக நிறுத்திக் கொள்ள விரும்புவதால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார் அன்புமணி ராமதாஸ். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விதையை தூவ ஆரம்பித்துவிட்டோம். நிச்சயம் அறுவடை செய்வோம்”

“சாதிவாரிக் கணக்கெடுப்பை வைத்து `சீசனல் பாலிட்டிக்ஸ்’ செய்கிறது பா.ம.க என்ற விமர்சனங்கள் இருக்கிறது. கணக்கெடுப்பு நடத்தாத தி.மு.க-வை சமூக நீதியற்ற இயக்கமென்றால் பா.ஜ.க-வை என்ன சொல்வீர்கள்?”

“1987 தொடங்கி வன்னியர் இடஒதுக்கீடு தொடங்கி, அனைத்து சமூக மக்களுக்காக போராடும் இயக்கம் பா.ம.க. பா.ஜ.க-வுடன் கூட்டணியிருப்பதால், அவர்கள் செய்வதெல்லாம் சரியென சொல்லுகிற இயக்கமல்ல பா.ம.க. சமூக நீதி இயக்கமென தன்னை சொல்லிக் கொள்ளும் தி.மு.க-வை நோக்கி அவ்வாறு நடந்து கொள்கிறார்களா எனக் கேட்கிறோம். மற்றபடி, பா.ஜ.க-வை சமூக நீதி இயக்கமென எங்கேயும் சொல்லவில்லையே!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88