3-வது முறையாக பதவியேற்றிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயம் சம்பந்தமான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. விவசாயம் சம்பந்தமான அறிவிப்புகள் விவசாயிகளுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து விவசாய பிரதிநிதிகளிடம் பேசினம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியிடம் பேசியபோது, “இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு 47.66 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இதில் வேளாண்மைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தொகை 1.52 லட்சம் கோடி மட்டுமே. அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.78% மட்டுமே. தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிக மிக குறைவாகவே இருந்து வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் 70% மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர். 59% மக்களுக்கு வேளாண்மை துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 59% மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறைக்கு குறைந்தபட்சம் 20 சதவிகிதமாவது ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் வெறும் 2.78 சதவீதம் மட்டுமே ஒதுக்கியிருப்பது வேளாண்மையை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்பதையே காட்டுகிறது.
இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்பது வரவேற்கக் கூடிய அறிவிப்பாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தும் போது இயற்கை விவசாயிகளை கலந்து ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தற்போது மத்திய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கும் திட்டம் தோல்வியடைந்திருப்பது போன்று இந்த திட்டமும் அமைய வாய்ப்புள்ளது.
கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை கூடுதல் ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது, நம்ப தகுந்ததாக இல்லை. வரியில்லாமல் வெளிநாட்டு பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டு, இந்திய எண்ணெய் வித்துக்களை புறக்கணிப்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட இந்திய எண்ணெய் வித்துக்களுக்கு தேங்காயைத் தவிர கொள்முதல் திட்டம் கிடையாது. கட்டுபடியான விலை இல்லாததால் விவசாயிகள் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இந்திய எண்ணெய் வித்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு கொள்முதல் செய்த வேண்டும். பற்றாக்குறைக்கு மட்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால்தான், இந்தியாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதுவரை அறிவிக்கப்படும் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி, அளித்த வாக்குறுதியான, விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு 11 ஆண்டுகளை கடந்தும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதை அமல்படுத்த கோரி விவசாயிகள் போராடியதாலேயே தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டது. அதன் பிறகும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்காமல், அதுசார்ந்த அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.
வேளாண் கடன் தள்ளுபடி, வேளாண் மின்சாரத்தை 100% மானியத்தில் வழங்குவது, விவசாயிகள் பாதிக்கப்படும்போது பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் எதுவுமே இடம்பெறாத இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்க போவதில்லை” என்றார்.
பாதுகாப்பானஉணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் பேசியபோது “கடந்த 10 ஆண்டுகளில் விவசாயத்துக்கு என்ன செய்தார் மோடி. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை போலவேதான் இருக்கிறது பட்ஜெட். இயற்கை விவசாயத்தை நடைமுறைபடுத்துவது எதுவும் உருப்படியாக இல்லை. ஏனென்றால் ஒருபக்கம் இயற்கை விவசாயம் என்று பேசிக்கொண்டே மறுபக்கம் உர கம்பெனிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செய்கிறது. இதற்கு முன்பு போடப்பட்ட பட்ஜெட்டிலும் விவசாயத்துக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொன்னார்கள். எதையுமே செய்யவில்லையே? பா.ஜ.கவின் சொல்லும், செயலும் எதுவும் நம்பும்படியாக இல்லை” என்றார்.
தமிழ்நாடு பா.ஜ.க விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜிடம் பேசியபோது, “குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை என்கிறார்கள். மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைபடுத்தியிருந்தால், இந்த கேள்வியே எழாது. விவசாயிகள் வியாபாரிகளாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அது நடைமுறைக்கு வராததால்தான் நாடு முழுவதும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது குறைந்த நாள்களில் கொண்டு வரக்கூடிய செயல்முறை அல்ல. அதுவொரு நீண்ட செயல்முறை. படிப்படியாக அது செயல்பாட்டுக்கு வரும். இயற்கை விவசாயத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 1 கோடி விவசாயிகள் என்பது சாதாரண விஷயமில்லை. தமிழக அரசை விட மத்திய அரசு விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அது இந்த பட்ஜெட்டிலும் எதிரொலித்திருக்கிறது.
வேளாண் கடன் தள்ளுபடி செய்வது தொடர்ந்து விவசாயிகளை கடனிலேயே வைக்கக்கூடிய ஒன்று. அதனால் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கோரிக்கை எழுகிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கை எழுவதில்லை. மொத்தத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டாட வேண்டிய பட்ஜெட் இது. 80 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸால் செய்ய முடியாததை பா.ஜ.க செய்திருக்கிறது. செய்து வருகிறது” என்றார்.