பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 7-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் 1.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 27 கோடி ரூபாய் அதிகரித்து இந்த முறை 1.52 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் ரசாயன உரம் இல்லாத இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகள் தங்கள் பொருள்களை பிராண்டிங் செய்து கொள்ளவும், சான்றிதழ்கள் பெறவும் வழிகாட்டப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும். இயற்கை விவசாயம் மண்ணின் ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு சாகுபடி செலவையும் குறைத்து, அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும், டிஜிட்டல் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 400 மாவட்டங்களில் டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் காய்கறிகளின் சீரான விநியோகத்தை மேற்கொள்ள குறிப்பிட்ட இடங்களில் காய்கறி உற்பத்தி மண்டலங்கள் உருவாக்கப்படும். விவசாய ஆராய்ச்சியில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும். விவசாயத்தில் காலநிலையை எதிர்த்து வளரக்கூடிய ரகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். புதிதாக 109 அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்த்து வளரக்கூடிய ரகங்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்படும்.
பயோ உரங்களை விநியோகிக்க 10 ஆயிரம் இடங்களில் பயோ இடுபொருள் மையங்கள் உருவாக்கப்படும். காலநிலை, பயிர் ரகங்கள் பற்றிய ஆலோசனை, விளைபொருள்களின் விலை குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும். ஜன் சமர்த் வகையான கிஷான் கிரெடிட் கார்டுகள் ஐந்து மாநிலங்களில் வழங்கப்படும். நபார்டு வங்கி மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி செய்யப்படும்.
அறிவிப்புகள்:
கடுகு, எள், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
காய்கறி விற்பனை தொடர் சங்கிலி உருவாக்கப்படும்.
வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும்.
ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு.
டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.
டிஜிட்டல் முறையில் கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சர்வே செய்யப்படும்.
1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற்றப்படுவார்கள்.
10,000 பயோ உரங்கள் மையங்கள் கிராம பகுதிகளில் அமைக்கப்படும்.