Kamala Harris Trolls: “இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்” – கங்கனா ரணாவத் கண்டனம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்தார். சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார். மேலும், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்

இதனால் ஒருதரப்பில் கமலா ஹாரிஸிற்கு ஆதரவுகள் குவிந்து வர, மற்றொருபுறம் ஒருசிலர் கமலா ஹாரிஸை ட்ரோல் செய்து மீம்கள் பதிவிட்டு வருகின்றனர். இது அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது.

அதில் பெரும்பாலான மீம்கள் கமலா ஹாரிஸும், முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரவுனும் 1990 காலத்தில் காதல் உறவிலிருந்ததாகவும், கமலா ஹாரிஸ் 29 வயதாக இருக்கும்போதே 60 வயதிருக்கும் மேயர் வில்லி பிரவுனுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டு ஏகப்பட்ட மீம்களை வைரல் செய்து வந்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றிய இதுபோன்ற வதந்தியான மீம்களுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மிகப்பெரிய தலைவரை இப்படி கீழ்த்தரமாக ட்ரோல் செய்வது கண்ணியமான செயலல்ல’ என்று பலரும் இது குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான கங்கனா இது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஜோ பைடன் அவர்கள் கமலா ஹாரிஸிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இப்படியான மீம்கள் வைரல் செய்யப்பட்டிருக்கிறது. நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவில்லை. இருப்பினும் மதிக்கத்தக்க ஒரு பெண் தலைவரை இப்படி கீழ்த்தரமாகப் பேசுவதை, ட்ரோல் செய்வதையும் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த ஒரு வயதான பெண் அரசியல்வாதி இந்த அளவிற்கு பாலியல் ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நவீன நாடுகளில் இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, அதற்கு இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள்” என்று பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தனது கண்டத்தைத் தெரிவித்திருக்கிறார்.