தோல்வியில் முடிந்த இரண்டு ஆண்டு வேட்டை பயிற்சி – வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வால்பாறை புலி!

கோவை மாவட்டம், வால்பாறையின் முடீஸ் எஸ்டேட் பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட 8 மாத புலிக்குட்டி குறித்து வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. தாயைப் பிரிந்திருந்த அந்த ஆண் புலிக்குட்டி, முள்ளம்பன்றியைச் சாப்பிட்டபோது பலத்த காயமடைந்திருந்தது.

புலி மீட்டகப்பட்டபோது…

அங்கிருந்து மீட்கப்பட்ட புலிக்கு வனத்துறையினர் சிகிச்சை வழங்கினர். தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, அந்த புலிக்கு வனப்பகுதியில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்க வனத்துறை முடிவு செய்தது.

தாயுடன் இருக்கும்போது, வேட்டை உள்ளிட்ட பயிற்சி இயல்பில் கிடைத்துவிடும். சிறிய வயதிலேயே தாயைப் பிரிந்ததால் அந்தப் புலிக்குக் காடுகள் குறித்த புரிதலும், வேட்டைப் பயிற்சி குறித்த தெளிவும் இல்லாததால் பலம் குறைந்திருக்கும். அப்படியிருக்கும் போது புலியைக் காட்டில் விட்டால், அது வாழ்வது கடினம் என்று கருதி அதன் வேட்டைத் திறனை மேம்படுத்தி வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.

புலி

இதற்காக மானாம்பள்ளி அருகே 10,000 சதுர அடி பரப்பளவில் இயற்கைப் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அறிவியல் பூர்வமான இந்தத் தொழில்நுட்பத்தில் புலிக்குப் பாதுகாப்பு அரணில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புலிக்கு வேட்டை பயிற்சி வழங்கக் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளும் அரணில் விடப்பட்டன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அந்தப் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புலி

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, “சுமார் 150 கிலோ எடையுள்ள அந்தப் புலிக்குத் தொடர்ந்து பயிற்சியளித்தும், வேட்டையாடுதல், தண்ணீரைத் தேடிச் செல்லுதல் உள்ளிட்ட எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. காடுகளில் வாழ்வதற்கான குணாதிசயம் இல்லாமல் அது மனிதர்களையே சார்ந்துள்ளது. எனவே அந்தப் புலியால் காடுகளில் வாழ முடியாது.

இது தொடர்பாக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அந்தப் புலியை வனத்தில் விடுவது சரிவராது, அதனால் புலியை உயிரியல் பூங்காவுக்கு மாற்றிவிடலாம் என்று பரிந்துரை செய்தது.

புலியை இடமாற்றம் செய்யும்போது…

அதனடிப்படையில் அந்தப் புலி நேற்று ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளியில் இருந்து வண்டலூர் புலிகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அந்த பாதுகாப்பு அரணை இனி மற்ற விலங்குகளுக்குப் பயன்படுத்துவோம்” என்று கூறியுள்ளனர்.