`அரசு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் பணிசெய்யணும்’ – 40 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு ஆட்சியரான பெண்

தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், நேற்று பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது, இவருக்குகான கூடுதல் சிறப்பு. விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆட்சியர் பிரியங்காவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர், விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட பகுதி என்பதால், இங்கு ஏற்கெனவே பணியிலிருந்த ஆட்சியர்கள் ஏகப்பட்ட சவால்களை சந்தித்தனர். அதுபோல் பிரியங்கா முன்பும் ஏகப்பட்ட சவால்கள் வரிசை கட்டி நிற்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பிரியங்கா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், ஆட்சியர் பிரியங்காவை டெல்டாவின் மகள் என விவசாயிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகின்றனர். காவிரியின் மடியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் வலிகள், துயரங்களை உணர்ந்திருப்பவர். எனவே, விவசாயப் பிரச்னைகளில் தனி கவனம் செலுத்தி சாதுர்யமாகக் கையாண்டு சவால்களை சமாளிப்பார் என்கிற எதிர்பார்ப்பு பிரியங்கா மீது எழுந்துள்ளது. அதற்கேற்றார் போல் பதவியேற்றதும் ஆட்சியர் பிரியங்கா, ’விவசாயத்திற்கும், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பேன், அனைத்து அதிகாரிகளும் சிரித்த முகத்துடன் பணி செய்ய வேண்டும்.

குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனு கொடுத்தவர்கள் மீண்டும் வராத வகையில் அலுவலர்கள் பணி செய்ய வேண்டும். ஒவ்வொருவர் கொடுக்கும் மனுவுக்கு பின்னால் ஆயிரம் கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும்’ எனப் பிரியங்கா பேசியிருக்கிறார்.

ஆட்சியர் பிரியங்கா, தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி களைய வேண்டும் என்பது தஞ்சையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜீவக்குமார்

இது குறித்து சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில், ’’உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், உலக பொக்கிஷமாக கருதப்படும் சரஸ்வதி மஹால் நூலகம் என தஞ்சையின் சிறப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. சுற்றுலாத்தளமாகவும் தஞ்சை வளர்ச்சியை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் பெரியகோயிலுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. பெரியகோயில் பாதுகாப்பில் நிலவும் அலட்சியப்போக்கை உடனடியாக களைய வேண்டும். நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் சரஸ்வதி மஹால் நூலகம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் நேரத்திலும் காலை, இரவு என பல இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடக்கிறது. கஞ்சா விற்பனையும் சகஜமாக நடக்கிறது. இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் வெகுவாக பாதிக்கப்பட்டு சீரழிவதுடன் தங்கள் பொருளாதாரத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால், குடும்பப் பெண்கள் பலர் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெட்டிக்கடை, டீக்கடை, மளிகை கடை என கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை எங்கும் பரவியிருக்கின்றன. இதில் பல பெண்கள் பணத்தை இழப்பதும் வாடிக்கை.

ஏ.கே.ஆர்.ரவிசந்தர்

திருநங்கைகள் பலர் சுயதொழில் உள்ளிட்ட பலவற்றில் ஈடுபட்டு முன்னுதாரணமாக இருந்து வரும் சூழலில், சிலரோ சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவு நேரங்களில் பைபாஸ் சாலை ஓரங்களில் நின்றபடி சில திருநங்கைகள் சாலையில் செல்வோரை பாலியலுக்கு அழைக்கின்றனர். இதில் உரிய கவனம் செலுத்தி அந்த திருநங்களைகளை நல்வழிப்படுத்தி சரியான வாய்பை அமைத்து தர வேண்டும். மணல் கொள்ளை பெருமளவில் நடக்கிறது. இவற்றில் எல்லாம் உரிய கவனம் செலுத்தி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் கூறுகையில், ’’கல்லணை கால்வாயில் பக்கவாட்டிலும், தரை தளத்திலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணியில் பல வித முறைகேடுகள் நடக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா பயிர்கடன் சில வருடங்களாக வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். தனியார் உரக்கடைகளில், இஷ்டம் போல் விலை வைத்து கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்கின்றனர். பயிர் காப்பீட்டிற்கான அலுவலகத்தை தஞ்சையில் திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

ஆட்சியர் பிரியங்கா

பல துறைகளை சேர்ந்தவர்கள் பணியின் போது உயிரிழந்தால் அரசு நிவாரணம் வழங்குகிறது. விவசாயிகள் பணியின் போது உயிரிழப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இது குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று விவசாயப் பணிகளின் போது உயிரிழக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான நிரந்தர உத்தரவை பெற வேண்டும். டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்த ஆட்சியர் பிரியங்கா மண், மக்கள் செழிக்க ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார்.