Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை’ – உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

உத்தரப்பிரதேசத்தில் கங்கையை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் சிவ பக்தர்கள் நடைபயணம் செய்து, கங்கையில் நீர் எடுத்து தங்கள் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்வு கான்வர் யாத்திரை என கூறப்படும். இந்த நிலையில், யாத்திரைக்கு செல்லும் பகுதியில் இருக்கும் கடைகளில் பண்டங்களின் பெயர்களுடன் சேர்த்து, கடை உரிமையாளரின் பெயரும் இடம்பெற வேண்டும் என அண்மையில் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.

கன்வார் யாத்திரை

இதைப் பின்பற்றி, உத்தரகாண்ட், மத்தியப்பிரதேச அரசுகளும் அதே உத்தரவை வெளியிட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், என்.டி.ஏ-கூட்டணியில் இருக்கும் ஜே.டி.யூ உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ​​மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைகளில் பெரும்பாலானவை டீக்கடைகள், சில பழக்கடைகள். இந்த உத்தரவு உரிமையாளர்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும். இதன்மூலம் அப்பட்டமான அடையாளப்படுத்தும் அரசியல் முன்வைக்கப்படுகிறது. குடியரசு நாட்டில் இதை செயல்படுத்த முடியாது.

கன்வார் யாத்திரை

மேலும், தற்போதுவரை அனைத்து மதத்தினரும் யாத்திரைக்கு வருபவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் உதவிவருகிறார்கள். பொருள்களின் பெயர்களுடன், உரிமையாளரின் பெயரையும் எழுதுவதற்கு உத்தரவிடும் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், பெயர் பலகை உத்தரவுக்கு தற்காலிக தடை பிறப்பித்து, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.