சேலம்: சாலையில் சென்ற பெண்ணை கீழே தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – கைதுசெய்த போலீஸ்!

சேலம், வீராணம் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த திங்கள்கிழமை (15.07.2024) கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை பின் தொடர்ந்துவந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்னைக் காலை வாரிவிட்டு கீழே தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் கத்தியதில் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதில், முகம்தெரியாத அளவுக்கு தொப்பி அணிந்த இளைஞர் ஒருவர்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர் பொதுமக்களை பார்த்தவுடன் வேகவேகமாக ஓடிவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வீராணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீராணம் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்துக்கொண்டு அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இச்செயலில் ஈடுபட்டது மன்னார்பாளையம் அடுத்த அள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (27) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்த வீராணம் காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் இது போன்று வீட்டு அருகே உள்ள மூதாட்டிகளிடமும், சிறுமிகளிடமும் தவறாக நடந்து கொண்டதும் தெரியவந்தது. அவருக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து, அதன் காரணமாக தற்போது இது போன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் பெண் ஒருவரிடம் சாலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.