`அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இணையலாம்’ – தடையை நீக்கிய மத்திய அரசு; எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

சமீபத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான மத்திய என்.டி.ஏ அரசு, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேருவதற்கு இருந்த தடையை நீக்கியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

சு.வெங்கடேசன்

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்ததாலும், தொடர் வன்முறைக் காரணங்களாலும் 1948-ன் ஆரம்பத்தில், “நாடு இப்போது பெற்றியிருக்கும் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ஒரு சட்டவிரோத அமைப்பு” எனக் குறிப்பிடப்பட்டு, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலால் தடை அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஜூலை 18, 1948 அன்று ஹிந்து மகாசபா தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு சர்தார் வல்லபாய் படேல் எழுதிய கடிதத்தில், “இந்து மகாசபாவின் தீவிரப் பிரிவினர் காந்தியைக் கொல்ல சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகள் அரசு மற்றும் அரசின் செயல்பாடுகளுக்கு தெளிவான அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் ஓயவில்லை என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன.

ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்த பதிவு

உண்மையில், காலம் செல்லச் செல்ல ஆர்.எஸ்.எஸ் மேலும் நாசகார நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபடுகின்றன.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் 18 மாதங்களுக்குப் பிறகு இந்த தடையை சர்தார் வல்லபாய் படேலே விலக்கினார். 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தின்போதும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில்,“மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ் – மோடி

இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “1948 பிப்ரவரியில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்தார். இதன்பின், தடை நீக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை நாக்பூரின் ஆர்.எஸ்.எஸ் தலைமை இடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. 1966-ல் அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 4, 2024-க்கு (தேர்தல் முடிவு) பிறகு , மனித பிறவியல்லாத பிரதமருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஜூலை 9, 2024 அன்று, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இணைவதற்கான 58 ஆண்டு தடை, நீக்கப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டு, ஜூலை 9 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) பிறப்பித்த உத்தரவைப் பகிர்ந்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88