`அரசியலில் தொடர வேண்டுமா என்று யோசித்துள்ளேன்…’ – மனம் திறந்த அண்ணாமலை!

நாடாளுமன்ற தேர்தலில், கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அப்போது ‘Peoples for Annamalai’ என்ற பெயரில் தன்னார்வலர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக களப்பணியாற்றினர். ‘கோவை தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

கோவை நிகழ்ச்சி

அவர்கள் பாஜக ஆதரவாளர்கள்.’ என அண்ணாமலை கூறியிருந்தார். இது தொடர்பாக தன்னார்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் ஓட்டு போட்ட மை இருக்கும்போதே, “எங்கள் ஓட்டை காணவில்லை.” என்ற பதாகையுடன் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் நடந்த நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய வானதி சீனிவாசன், “அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா. ஆனால் எனக்கு அன்புடன் தம்பி. அரசியல் தெரியாதவர்கள் கூட அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள்.

வானதி சீனிவாசன்

பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக இயங்குவதும், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதும் தான் கடமை. வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பினரை மட்டும் அழைத்து பாராட்டியிருந்தால், அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார் என புரளி கிளப்பி விட்டிருப்பார்கள். ஆனால் பாஜக நிர்வாகிகளையும் இங்கு அழைத்திருப்பதால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ஜனநாயகம் மெதுவாகத்தான் நகரும். தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டுகள் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றிவிடும். நான் காவல்துறையில் இருந்தபோது சரி, தவறு என்ற அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடிந்தது. அரசியல் கட்சித் தலைவரான பிறகு கடந்த மூன்றாண்டுகள் கடினமாகத்தான் இருந்தது. சராசரி மனிதர்களை போல, எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்.

அண்ணாமலை

சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்று யோசித்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் போன்றவை வேண்டும். கோவையில் வெற்றி தள்ளி போயுள்ளது. தோல்வி என நினைக்க வேண்டாம்.” என்றார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு நாளை முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை. மற்ற மாநில மின் கட்டணத்துடன் ஒப்பிடுவது முட்டாள்தனம். திமுக வாக்குறுதியான மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதை நிறைவேற்றவில்லை. இரண்டு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் செலுத்துவதால் கட்டணம் அதிகமாகிறது. மத்திய அரசு மீது பழி போடுவதே முதல்வரின் இலக்கு.

அண்ணாமலை

ஒரு கட்சியில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாது. யார் தவறு செய்தாலும் நீக்கம் செய்ய வேண்டும். நாங்களும் அதை செய்து வருகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ‘தி கிரைம் முன்னேற்ற கழகம்’ என்ற 18 பக்கங்கள் கொண்ட திமுக-வில் உள்ள குற்றப்பின்னணி உள்ளவர்களின் பட்டியலை வெளியிடுகிறோம்.” என்றார்.