மீண்டும் `Razakar’- மாணவர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தால் பற்றியெரியும் வங்கதேசத்தில் 130 பேர் பலி!

அண்டை நாடான வங்க தேசம் கடந்த ஒரு மாதமாக வன்முறையின் பிடியில் சிக்கி இருக்கிறது. இந்தியா உருவாக்கிக் கொடுத்த வங்க தேசத்தில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசு வேலைவாய்ப்புகளில் 1971-ம் ஆண்டு நடந்த வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததுதான், மாணவர்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் இப்போராட்டத்தை தொடங்கினர். இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், ஆளும் அவாமி லீக் கட்சிக்கு சாதகமானது என்றும், திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போராட்டத்தில் போலீஸார் மட்டுமல்லாது ஆளும் அவாமி லீக் கட்சி தொண்டர்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். வங்கதேசம் எங்கும் போர்க்களமாக இருக்கிறது. ஆனால் போராட்டக்காரர்களை பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்திருப்பதோடு `ரஸாகர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் ரஸாகர்கள்?

ரஸாகர்கள் என்பது 1971-ம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் போது பாகிஸ்தான் உருவாக்கிய துணை ராணுவ படையாகும். இந்த படையில் வங்க மற்றும் உருது மொழி பேசும் பீகார் மக்கள் இடம் பெற்று இருந்தனர். சுதந்திர போராட்டத்தின் போது ரஸாக்கர்கள் ஏராளமான கொலை, பாலியல் வன்கொடுமை, கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அவர்கள் சுதந்திரத்திற்கு பிறகு தேச விரோதிகளாக பார்க்கப்பட்டனர். 2010ம் ஆண்டு இக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்த பிரதமர் ஷேக் ஹசீனா சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தார். அத்தீர்ப்பாயம் விசாரித்து பலருக்கு தண்டனை கொடுத்து இருக்கிறது. 2019ம் ஆண்டு வங்க தேச அரசு 10,789 பேரை ரஸாகர்களாக அறிவித்து அவர்களது பெயர்ப்பட்டியலை வெளியிட்டது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

தற்போது மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து இருக்கும் கருத்துதான் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஷேக் ஹசீனா, “சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரப்பிள்ளைகள் இல்லையென்றால், யாருக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும்? ‘ரஸாகர்களின்’ பேரப்பிள்ளைகளா? நாட்டு மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். போராட்டக்காரர்கள் ஒத்துப்போகவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடரலாம். போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தினால் அல்லது காவல்துறையினரை தாக்கினால், சட்டம் தனது கடமையை செய்யும். எங்களால் உதவ முடியாது” என்று குறிப்பிட்டார்.

ஷேக் ஹசீனாவின் இந்த பேச்சு போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. தங்களை ரஸாகர்கள் என்று கூறிவிட்டாரே என்ற கோபத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இதுவரை போராட்டத்தில் 130 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் இட ஒதுக்கீடு மட்டுமல்லாது ஷேக் ஹசீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதாக வங்கதேசத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வங்க தேச அரசியல் நிபுணர் முபாஷர் ஹசன் கூறுகையில், “ஷேக் ஹசீனா எதிர்க்கட்சிகளை அடக்கிவிட்டு தொடர்ந்து பதவியில் இருப்பதாகவும், அவரை சர்வாதிகாரி என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரானது” என்று தெரிவித்தார்

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1972ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. 2018ம் ஆண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது வங்க தேச சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb