Kanwar Yatra: உணவகங்களில் பெயர்ப்பலகை… உ.பி-யில் யோகி சர்ச்சை உத்தரவும் பின்னணியும்!

உத்தரப்பிரதேசத்தில் ‘கான்வர் யாத்திரை’ செல்லும் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்களின் பெயர்ப்பலகைகளிலும், உணவகத்தின் உரிமையாளர் பெயர்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்

வட இ்ந்தியாவில் ஓவ்வோர் ஆண்டும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை முப்பது நாள்கள் ‘கான்வர் யாத்திரை’ என்ற காவடி யாத்திரை நடைபெறும். டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிவபக்தர்கள் சோமவார விரதம் இருந்து, காவடி தூக்கிச்செல்வார்கள்.

ஹரித்துவார், கங்கோத்திரி, கேதார்நாத், வாரணாசி உள்ளிட்ட ஆன்மித் தலங்களுக்கு சிவபக்தர்கள் நடைப்பயணம் மேற்கொள்வார்கள். அப்போது, கங்கைநீரை எடுத்துவந்து தங்கள் ஊர்களில் இருக்கும் சிவலிங்கத்துக்கு அமாவாசை, மகா சிவராத்தரி அன்று அபிஷேகம் செய்வார்கள். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கான்வர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, நெருஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

ஹரித்வார்

இந்த நிலையில், கான்வர் யாத்திரை செல்லும் வழிகளில் இருக்கும உணவகங்கள் அனைத்திலும், உணவகத்தின் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை பெயர்ப்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவை முதல்வர் யோகி பிறப்பித்திருக்கிறார்.

முதலில், முசாபர்நகர் மாவட்டம் முழுவதும் உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களை கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காவல்துறையின் உத்தரவை வாபஸ் பெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அகிலேஷ் யாதவ்

அதற்கு மறுநாள், உ.பி-யில் கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும் உணவகங்களின் உரிமையாளர் பெயர்கள் எழுதிவைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை யோகி பிறப்பித்தார். ‘ஆன்மிகப் பயண’த்தின் புனிததைப் பாதுகாக்கவே இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படுவதாக யோகி கூறியிருக்கிறார். அவரது உத்தரவின்படி, சிறு உணவகங்கள், பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்கள் என அனைத்து உணவகங்களின் உரிமையாளர் பெயர்களும் எழுதிவைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை உத்தரப்பிரதேச அமைச்சர் கபில் தேவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். அதாவது, ‘முஸ்லிம் வியாபாரிகள் தங்களை இந்துக்கள் போலக் காண்பித்துக்கொண்டு, புனித யாத்திரை செல்பவர்களுக்கு அசைவ உணவை வழங்கிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் உணவகங்களின் பெயர்களை வைஷ்ணவ் தாபா பந்தர், ஷகும்பாரி தேவி போஜனாலயா என்று வைத்துக்கொண்டு, அசைவ உணவுகளை விற்பனை செய்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசம்

யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. ‘இது ஒரு சமூகக் குற்றம்’ என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அகிலேஷ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

‘நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை இது’ என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியும், ‘அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் மதவெறி இது’ என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெராவும் விமர்சித்திருக்கிறார்கள். யோகி அரசின் இந்த நடவடிக்கையை அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்றும் கெரா கூறியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க-வின் கோட்டை என்று கருதப்பட்ட உ.பி-யில், கடந்த மக்களவைத் தேர்தலில் பின்னடைவை பா.ஜ.க சந்தித்தது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க-வுக்குள் கோஷ்டி மோதல்கள் அதிகாரித்து, அதிகார யுத்தம் உச்சத்தை அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த விவகாரத்தால், முதல்வர் யோகியின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டிருக்கிறது. விரைவில் உ.பி-யில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், உணவக உரிமையாளர்களின் பெயர்களை எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவின் மூலம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி திசை மாற்றம் செய்ய முயற்சி நடைபெறுவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88