சேலம்: அயோத்திக்கு போலியான விமான டிக்கெட்டுகள் – பக்தர்களை ஏமாற்றிய இரண்டு பேர் கைது!

ஆன்மிக சுற்றுலாவுக்கு சலுகைகளில் சாலை மார்கமாகவும், ரயில் ஆகியவற்றின் மூலமாக சிலர் அழைத்து செல்கின்றனர். அதேபோல் அயோத்தி, கயா, காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான மூலம் அழைத்துச் சென்று அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராஜா என்பவர் அறிவித்தார். விமானம் மூலம் அயோத்தி சென்று விட்டு திரும்பி வர ஒருவருக்கு 12,000 ரூபாய் என பேக்கேஜ் முறையில் கூறினார். இதையடுத்து சேலம், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 105 பேர் சுமார் 13 லட்சத்தை செலுத்தினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பணத்தை செலுத்திய அனைவருக்கும் விமான டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை எடுத்துக் கொண்டு அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு டிக்கெட்டை பரிசோதித்துப் பார்த்தபோது, அது போலி விமான டிக்கெட் என தெரியவந்தது. இதை அடுத்து அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையம்

இந்த விவகாரத்தில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 10 பேர் ஏமாந்து போயியுள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராஜா என்பவர் தான் முக்கியமாக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் டிராவல்ஸ் மூலம் பக்தர்களை ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்று வந்துள்ளார். அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் திட்டத்தை வைத்திருந்தார். அப்போது திருப்பதியை சேர்ந்த சபானந்தம் சிகிச்சைக்காக நாமக்கல் கொல்லி மலைக்கு வந்துள்ளார். அவரை வாடகை காரில் ராஜா அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆன்மிகப் பயணம் குறித்து ராஜா தெரிவித்தவுடன் விமான டிக்கெட் எடுப்பது குறித்து பேசி உள்ளார்.

தனக்கு விமான நிலைய அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாக தெரிவித்த சபானந்தம் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு போலியாக டிக்கெட்டை தயாரித்து அனுப்பியுள்ளார். பணத்தை இருவரும் வாங்கி பங்கிட்டுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88