உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் பயனர்களின் கம்ப்யூட்டர்களில், ‘Your system needs to restart’ என்ற நீலத்திரை இருப்பதால் போக்குவரத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, உலக அளவில் விமானம் மற்றும் ஐ.டி துறை ஸ்தம்பித்துள்ளது.
இன்று காலை முதல் வேலை செய்ய முடியாமல் ஐ.டி ஊழியர்கள் தவித்து வருகிறார்கள். இதற்கு விண்டோஸ் 10-ல் கொண்டு வரப்பட்ட புது அப்டேட் ஒன்றே காரணம் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் விமானச் சேவைகள் பாதுப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்தியாவில் டெல்லி, அகமதாபாத், மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட பல விமான நிலையங்களில் சேவைகள் முடங்கியுள்ளன.
தற்போது வரை சென்னையில் மட்டும் 20 விமானச் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் விமானங்கள் வருகை, புறப்பாடு விஷயங்களில் சிக்கல் உருவாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் குழுவின் இணையச் சேவைகளும் முடங்கியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ். இந்நிலையில் இன்று காலை முதல் அதன் பயனர்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் விண்டோஸ் 10-ற்குப் பாதுகாப்பு அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அது Crowdstrike என்கிற சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்த குறைபாடுகளால்தான், இந்த மைக்ரோசாஃப்டின் முடக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பல்வேறு பயனர்களும் தங்கள் கருத்துக்களை X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதிகாரப்பூர்வ மைக்ரோசாஃப்ட் வலைப்பதிவில், விண்டோஸை உடனடியாக ஷட்டவுன் அல்லது ரீஸ்டார்ட் செய்யும்போது நீலத் திரையில் அசையாமல் இருப்பதாக பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிழைகள் மென்பொருள் அல்லது வன்பொருளில் உள்ள சிக்கல்களால் ஏற்படலாம்.
இருப்பினும், இந்த விண்டோஸில் உள்ள சிக்கல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அப்டேட் ஒன்றால் ஏற்பட்டதாக Crowdstrike ஒப்புக்கொண்டது. அந்நிறுவனம் தனது பொறியியல் குழுக்கள் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் விளக்கமளித்துள்ளது.
அப்டேட் சரிசெய்யப்படும் வரை என்ன செய்வது என்கிற கேள்விக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அளித்த விளக்கத்தில், ‘ ஒருவேளை, நீலத்திரை தோன்றினால், கம்ப்யூட்டரை பூட் (Boot) செய்வதன் மூலம் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவர இயலும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் வங்கிச்சேவையில் பிரச்னை ஏற்படவில்லை என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்பக் கோளாறு சீராகும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சொல்லிவரும் நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
வேலைகள் ஒருபுறம் முடங்கியிருந்தாலும், வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்டார்ட் ஆகவேண்டிய ‘வீக் எண்ட் மோடு’, காலை 10 மணியில் இருந்தே ஆரம்பித்துவிட்டதாக சமூக வலைதள பக்கங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.