`3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்களை விடியா திமுக அரசு மூடியிருக்கிறது!’ – எடப்பாடி பழனிசாமி தாக்கு

மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2013-ல் அம்மா உணவகம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர், 2021-ல் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அம்மா உணவகம் திட்டம் தொடர்ந்து அதே பெயரிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் – ஸ்டாலின்

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அம்மா உணவகத்துக்கு திடீர் விசிட் அடித்தார். அதோடு, அம்மா உணவகங்கள் பராமரிப்புக்காக ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில், 3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்களை விடியா திமுக அரசு மூடியிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மூடப்பட்ட உணவகங்களைத் திறக்குமாறும், தரமானதாக இயக்குமாறும் முதல்வரை வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி தனது X சமூக வலைதளப் பதில், “2021-ல் ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு அம்மா உணவகங்களை தி.மு.க நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களைத் தரமாக வழங்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது விடியா தி.மு.க அரசு.

எடப்பாடி பழனிசாமி

உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்ட விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர், உணவின் சுவையைச் சோதித்தார்.

முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதைப் போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, விடியா தி.மு.க அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா…

அம்மா உணவகம் திட்டம் – ஜெயலலிதா

அம்மா ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த விடியா தி.மு.க அரசு. இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் ஸ்டாலின்… இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களைத் திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, அம்மா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88