அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஒருவர் ட்ரம்ப்பைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாகத் தோட்டா காதில் உரசிச் செல்ல ட்ரம்ப் உயிர் தப்பினார்.
இருப்பினும், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். அதேசமயம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் ரகசிய சேவை ஸ்னைப்பர்களால் (Secret Service snipers) சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்று தெரியவந்தது. அதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த சம்பவத்தில் ட்ரம்ப்பின் தலைக்கு குறிவைக்கும் படத்துடன் கூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க பத்திரிகையாளர் மரியோ நவ்ஃபல் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில், தனது ஆதரவாளர்களை நோக்கி பேசிக்கொண்டிருக்கும் ட்ரம்ப்பின் தலைக்கு குறிவைத்திருப்பதும், சுடும் நேரத்தில் மைக்ரோ நொடிகளில் ட்ரம்ப் திரும்பியதும் காட்டப்படுகிறது.