கனவு – 149 | சென்னை சரக்கு / மெட்ரோ / அலங்காரப் படகு சேவைகள் | சென்னை – வளமும் வாய்ப்பும்!

சென்னையை சிங்கார சென்னை 5.O ஆக தரம் உயர்த்தும்போது அதற்கேற்றவாறு சுற்றுலாவுக்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கும். அதன் ஒரு பகுதியாக உலாப் படகு (Yacht) சேவையையும் துவக்கலாம். இந்தச் சேவையை 3 வகையாகப் பிரித்து, அமல்படுத்தலாம். இந்த வகையான சேவைகளுக்கு மாறுபட்ட உலாப் படகுகளை (Yachts) பயன்படுத்திக்கொள்ளலாம்.

சென்னை மாநகரின் முக்கிய இடங்களான பாரிமுனை, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகளை இணைக்கும் வகையில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு படகு போக்குவரத்து நீரிவழித் தடம் உள்ளது. ஏற்கெனவே, சென்னையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்ல இந்தத் தடம் உருவாக்கப்பட்டிருப்பதால், அதன் ஒரு பகுதியை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நீர்வழித் தடத்தில், அதில் மீன்பிடி அனுபவ சேவை (Fishing Season), சரக்குப் படகு சேவை (Cargo shipping service), இரவில் கடல் உலா (Dinner Cruise) போன்ற சேவைகளை வழங்கலாம்.

பாரிமுனையிலிருந்து மாமல்லபுரம் கடற்கரை இடையே மீன்பிடி உலா படகு மற்றும் இரவு உலா சொகுசு படகு சேவைகளையும் (Yacht service), சென்னை திருவொற்றியூர் கேளம்பாக்கம் கடற்கரை இடையே சரக்குகளை கையாளும் வகையில் சரக்கு படகு சேவையையும் (Cargo shipping service) அறிமுகப்படுத்தலாம். இந்தச் சேவைகளைத் தனியாரே வழங்கலாம். அதற்கான அனுமதிகளை அரசு தந்து, ஊக்குவிக்கலாம்.

கனவு – 149

சேவைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மீன்பிடி அனுபவ சேவை (Fishing Cruise)

இரவில் கடல் உலா (Dinner Cruise)

சரக்குப் படகு சேவை (Cargo shipping service)

உலாப் படகில் மீன்பிடி அனுபவ சேவை (Fishing Cruise)

சென்னையில் சூரிய உதயத்தைக் காணும் ஆர்வம் நாளுக்கு நாள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்தபடியே உள்ளது. அதே போன்று கடலுக்குள் சென்று மீன்பிடித்தல், குளித்தல் போன்ற சாகசங்களில் ஈடுபடவும் பலர் விரும்புகின்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உலாப் படகில் சென்று சூரிய உதயத்தைக் காணுவதோடு, மீன்பிடி அனுபவத்தை பெறும் வகையில் உலாப் படகில் மீன்பிடி அனுபவ சேவையைத் (Yacht / Fishing Season) தரலாம்.

இந்த சேவைக்கு உலாப் படகுகளை (Yacht) பயன்படுத்திக்கொண்டு, சேவையை காலை 6 மணி முதல் 12 மணி வரை அளிக்கலாம். அதிகாலை நேரத்தில் மீன் பிடித்தல் பயிற்சியையும் உடன் சேர்த்து வழங்கலாம். மதிய நேரங்களில் கடற்கரைக்கு வரும் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் உலாப் படகை சீர்செய்வதற்கும், சோதனை ஓட்டத்திற்கும் ஒதுக்கலாம்.

இந்தச் சேவைக்கு பலவாறாக பிரித்து அளிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயித்து, வசூல் செய்யும்போது லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டலாம்.

இரவில் கடல்உலா (Dinner Cruise)

சென்னை மாநகரத்தின் மயக்கும் இரவுக் காட்சிகளை கடலில் இருந்து நிலவை ரசித்துக்கொண்டே, இசையை தவழுவிட்டு மற்றும் பானங்களை அருந்திக் கொண்டே விருப்பமான உறவினர்கள், நண்பர்கள் உடன் ரசிக்கும் பயணமே இரவில் கடல் உலா (Dinner Cruise).

மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவின் சில குறிப்பிட்ட இடங்களிலும் மட்டுமே கிடைக்கும் இந்தச் சேவையை சென்னையில் துவக்கலாம். இதற்காக கடல் உலா சொகுசு படகுகளை (Super Yachts) பயன்படுத்தலாம்.

பாரிமுனையிலிருந்து இந்தக் கடல் உலா சொகுசு படகானது புறப்பட்டு, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், கோவளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாமல்லபுரம் வரை சென்று சேரும். பிறகு, அங்கிருந்து திரும்பி மீண்டும் பாரிமுனையை வந்தடையும்.

கனவு – 149

இதற்கான போக்குவரத்து நீர்த்தடம் ஏற்கனவே இருப்பதால் கடல் உலா சொகுசு படகு சேவையானது இடையூறின்றி இருக்கும். இரவு 5 மணியில் இருந்து 9 மணி வரை மட்டுமே இரவில் கடல் உலா சேவையை அமல்படுத்த வேண்டும். இந்த படகில் 10 பேர் முதல் 25 பேர் வரை பயணிக்கும் வகையில் இருக்கும்.

கடல் உலா சொகுசு படகானது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படகில் ஒரு திறந்த தளம் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே புகைப்படம் எடுக்க, நண்பர்களோடு பழக, நடனமாட ஏற்றவகையில் இருக்கும். மதுபானக்கடை மற்றும் உணவகம், ஓய்வறை உள்ளிட்ட வசதிகளும் உடன் இருக்கும். நள்ளிரவு என்பதால் பயணிகளுக்கு நிதானம் தவறாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் குளிர்பானம், பீர், ஒயின் போன்றவற்றை அனுமதிக்கலாம்.

அலையின் சப்தத்தோடு கேசத்தை வருடும் சில்லென்ற காற்றின் இதம் சுற்றுலாப் பயணியருக்கு மகிழ்ச்சியை தரும் பயண அனுபவமாக இருப்பதால் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கப் பெறும். இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை செய்து தரலாம். திட்டமிட்டப் பயண தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக ரத்து செய்துகொள்ளவும் அனுமதிக்கலாம். மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறுகளின் போது முழுத் தொகையையும் திருப்பி அளிக்கவும் செய்யலாம். ஒவ்வொன்றின் சேவைக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயித்து, வசூல் செய்யும்போது ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டலாம்.

சரக்குப் படகு சேவை (Cargo shipping service)

சென்னையின் போக்குவரத்து நெரிசல்களுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளே. திருவொற்றியூர் தொடங்கி கேளம்பாக்கம் வரை அதிகமான சரக்குகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் விரைவாக சரக்குகளை உரிய இடத்தில் சேர்க்கும் வகையிலும் திருவொற்றியூர் கோவளம் இடையே கடல் வழியாக சுமார் 47 கிலோ மீட்டர் சரக்குப் படகு சேவையை அமல்படுத்தலாம்.

கனவு – 149

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இந்தச் சேவையை பெற்றுக் கொள்ளலாம். சென்னை திருவொற்றியூர், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கோவளம் உள்ளிட்ட இடங்களில் சரக்குப் படகு நின்று செல்லும். இந்த இடங்களில் சரக்கு மையங்களில் இருந்து சிறிய ரக வாகனங்களில் எளிதாக எடுத்துச் செல்லாம்.

(இன்னும் காண்போம்!)