PM CARES: 51 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிப்பு… காரணம் சொல்லாத மத்திய அரசு!

‘கோவிட் 19’ பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி உயிரிழப்பு உள்பட பெரும் பாதிப்புகள் உச்சத்தில் இருந்தபோது, ‘பி.எம்.கேர்ஸ்’ என்ற நிதியுதவிக் கணக்கு தொடங்கப்பட்டது.

பி.எம். கேர்ஸ்

கொரோனா பாதிப்புகளைத் தடுப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற நோக்கங்களுக்காக ‘பிரதமரின் மக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம்’ (பி.எம்.கேர்ஸ்) என்ற பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், கொரோனா பெருந்தெற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 23 வயது வரை தேவையான உதவிகளைச் செய்வதற்காக பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் உதவிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நிதியின் கீழ் உதவி கோரிய 51 சதவிகித சிறார்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் வெளியானது. இது குறித்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு

பி.எம்.கேர்ஸ் உருவாக்கப்பட்டவுடன், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைக்கலைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், சமானியர்கள் என அனைவரும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்தனர். ஆகையால், அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி சேர்ந்தது. ஆனால், பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் எவ்வளவு நிதி பெறப்பட்டது, அதிலிருந்து எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்ற விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெளிப்படத்தனமை இல்லை என அவ்வப்போது குற்றச்சாட்டு எழும்.

பி.எம்.கேர்ஸ் என்று பிரதமர் பெயரில் நிதியத்தை ஏற்படுத்தியதுடன், அந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார். ஆனால், அரசுக்கும் பி.எம்.கேர்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. மேலும், அரசின் அங்கம் இல்லை என்பதால், பி.எம்.கேர்ஸ் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர முடியாது என்றும் ஷாக் கொடுத்தார்கள்.

மோடி

அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை சிலர் தாக்கல் செய்தனர். அதன் பிறகு, பி.எம்.கேர்ஸ் தொடர்பான சில தகவல்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. அதில், பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.50,000 கோடி செலவில் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படவிருக்கின்றன. அதற்காக, ரூ.2,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வென்டிலேட்டர்கள் கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.

மேலும், புலம்பெயர்த் தொழிலாளர்களுக்காக பி.எம்.கேர்ஸ் கணக்கிலிருந்து ரூ.1,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்றும், அந்தத் தொகை புலம்பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள்

ஆனால், பிரதமர் அலுவலகம் என்ன தான் தகவல்களைக் கொடுத்தாலும், பி.எம்.கேர்ஸ் விவகாரத்தில் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் போலவே பெரும் சர்ச்சைக்குரியதாக பி.எம்.கேர்ஸ் இருந்துவருகிறது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுப்பவர்களுக்கு, அந்தக் குழந்தைகளின் சட்டப்பூர்வமான பாதுகாவலர்களுக்கு பி.எம்.கேர்ஸ் நிதி வழங்கப்பட்டுவருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, தத்தெடுத்த பெற்றோர்களையோ, தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 613 மாவட்டங்களிலிருந்து 9,331 மனுக்கள் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பொருளாதார உதவி கோரி விண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றில் 4,532 மனுக்கள் மட்டுமே ஏற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா

4,781 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 18 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்தத் தகவல்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது, நிவாரணங்கள் வழங்குவது என்பதுதான் பி.எம்.கேர்ஸ் நிதியின் முழுமையான நோக்கம். அப்படியிருக்கும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் உதவி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை நிராகரித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. விண்ணப்பங்களை நிராகரித்ததற்கான காரணம் சொல்லப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இந்த விவகாரத்தில் காரணம் சொல்லப்படாதது குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். உண்மையில், தவறான அல்லது முறைகேடான விண்ணப்பங்கள் வந்திருக்கும் என்றால், அதனை நிராகரிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக சொல்வது என்பது அரசின் கடமை. காரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மூலம் உதவியை வழங்க மக்கள் கொடுத்த நிதி அது என்பது ஆட்சியாளர்கள் நினைவில் இருக்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88