13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்… இந்தியா கூட்டணி ‘ஆதிக்கம்’ சொல்லும் செய்தி என்ன?!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விக்கிரவாண்டி திமுக பிரசாரம்

தமிழ்நாட்டில் ஒரு தொகுதி, மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகள், இமாச்சலப்பிரதேசத்தில் மூன்று தொகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகள், பஞ்சாப்பில் ஒரு தொகுதி, மத்தியப்பிரதேசத்தில் ஒரு தொகுதி, பீகாரில் ஒரு தொகுதி என ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதில், ‘இந்தியா’ கூட்டணி 10 இடங்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பா.ஜ.க வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ராணகாட்தக்சின், பகதா, மணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இவற்றில் மூன்று தொகுதிகள் பா.ஜ.க வசம் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி

இமாச்சல்பிரதேசம் தெஹ்ரா, நலகர் ஆகிய தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்களூர் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தெஹ்ரா தொகுதியில் இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவன் மனைவி கமேலேஷ் தாக்கூர், பா.ஜ.க வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறார்.

இமாச்சலப்பிரதேசம் ஹமிர்புர், மத்தியப்பிரதேசம் அமர்வாரா ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் பா.ஜ.க வெற்றிபெற்றது. பீகார் மாநிலம் ரூபாலியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.

மோடி, ராகுல்

பொதுவாக, சட்டமன்றத் தேர்தல்கள் மாநில அளவிலான பிரச்னைகளை முன்வைத்துதான் நடக்கும். அதிலும், சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்னைகளை முன்னிறுத்தியே நடைபெறும் என்பது யதார்த்தம். ஆனாலும், ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 11 தொகுதிகளில் பா.ஜ.க அடைந்திருக்கும் தோல்வி, அந்தக் கட்சிக்கு தேசிய அளவில் கொள்கை ரீதியான, அரசியல் ரீதியான தோல்வி என்று விமர்சிக்கப்படுகிறது.

குறிப்பாக, மக்களவைத் தேர்தலில், அயோத்தி ராமர் கோயில் அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது. இப்போது, பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்துக்களின் புனிபூமியான பத்ரிநாத்திலேயும் பா.ஜ.க தோற்றுப்போயிருக்கிறது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, பா.ஜ.க மீது விழுந்திருக்கும் இன்னொரு அடியாக இது பார்க்கப்படுகிறது.

சு.வெங்கடேசன்

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி-யான சு.வெங்கடேசன், ‘அயோத்தி, பிரயாக் ராஜ், ராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ரகூட், இவற்றைத் தொடர்ந்து தற்போது தேவபூமி பத்ரிநாத்திலும் பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது. ஸ்ரீ ராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பா.ஜ.க தோல்வி. தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி’ என்ற கருத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஏழு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வினர் பின்னியிருந்த அச்சம் மற்றும் குழப்பத்தின் வலை உடைக்கப்பட்டிருப்பதை தெளிவாக்கியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வேலை செய்பவர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றன. பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பிற்காகவும் இந்திய அணியுடன் முழுமையாக நிற்கின்றனர். வாழ்க இந்தியா, அரசியல் சாசனம் வாழ்க” என்று கூறினார்.

ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் 237 தொகுதிகளில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக ‘இந்தியா’ கூட்டணி உருவெடுத்திருக்கும் நிலையில், தற்போது 13 தொகுதிகளில் பெற்றிருக்கும் வெற்றியால் ‘இந்தியா‘ கூட்டணித் தலைவர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்வோம்’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்த நிலையில், 240 தொகுதிகளைத்தான் பா.ஜ.க பிடித்தது.

இந்தியா கூட்டணி

அதை பிரதமர் மோடியின் தோல்வியாகவும் சித்தரித்த எதிர்க்கட்சிகள், 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜ.க தோற்றிருப்பதும் மோடிக்கு கிடைத்தத் தோல்வி என்ற கருத்தைப் பரப்புகின்றன. மேலும், ‘இந்தியா’ கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் அதன் தலைவர்கள் கூறிவருகிறார்கள். அடுத்ததாக, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் வெல்வோம் என்று ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

“கடந்த காலங்களில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் தலைவர்கள், எதிர்க்கட்சிகளை காணவில்லை என பேசினர். பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் அந்த கருத்தை சொல்லி இருந்தார். இந்த நிலையில் வெளி வந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதன் பிறக்கான இடைதேர்தல் முடிவுகளும் பாஜக-வுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. இதற்கு முழுமையான காரணம், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளை பாஜக-வால் கடந்த காலங்களை போன்று எளிதாக எத்ர்கொள்ள முடியவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் முடிவாக இருக்கிறது. இதனால் தனது வழக்கமான வியூகத்தை மாத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அக்கட்சி உள்ளது.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88