விக்கிரவாண்டி தேர்தல்: `திமுக, ரூ.250 கோடி செலவழித்து பெற்ற வெற்றி இது!’ – குற்றம்சாட்டும் அன்புமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,24,053 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

நடந்துமுடிந்த இந்த தேர்தலில் பா.ம.க தோல்வியைத் தழுவிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றிய கூட்டணிக் கட்சிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தி.மு.க இந்த தேர்தலில் ரூ.250 கோடி செலவு செய்திருக்கிறது. ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 பணம், ரூ.4,000 மதிப்புள்ள பொருள் கொடுத்திருக்கிறது. மூன்று தவணையாக பணம், அரிசி, புடவை, மூக்குத்தி எனக் கொடுத்து வாக்கை தி.மு.க வாங்கியது. உலகத்துக்கே தெரிந்த இந்தப் பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியாது. இதற்கு எதற்கு தேர்தல் ஆணையம். நேர்மையான தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த வெற்றிக்கு பெருமைப்பட தி.மு.க தலைவருக்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம். அதில் இருக்கும் விக்கிரவாண்டி மக்களுக்கு ரூ.500 என்பதே பெரிய தொகை.

ஆனால், அவர்களுக்கு ரூ.10,000 கொடுத்தால் அவர்கள் அதற்காக ஓட்டுப் போடத்தான் செய்வார்கள். இதில் மக்களின் மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை. 70 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் அவர்களை அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் திராவிட கட்சிகளால் ஓட்டை வாங்க முடியும். இந்த தேர்தலில் சுயமரியாதையுடன் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். கடந்த தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி 43,000 வாக்குகள் பெற்றிருக்கிறது. ஆனால் நாங்கள் 56,000 வாக்குகள் பெற்று பெரியளவில் மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

ராமதாஸ், அன்புமணி

நெல்லை படுகொலை, கள்ளச்சாரய மரணம், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை போன்ற தி.மு.க சட்ட ஒழுங்குக்கு கிடைத்த வெற்றி எனக் தி.மு.க-காரர்கள் கூறுவார்களா… தமிழ்நாடு முழுவதும் மக்கள் தி.மு.க மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். ஊழல், லஞ்சம் என மக்களின் கோபத்துக்கு காரணங்களும் இருக்கிறது. நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த தேர்தல் முடிவு வந்திருக்காது. தி.மு.க பணப் பரிவர்த்தனை செய்வதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சட்ட ரீதியில் எதிர்க்கொள்வோம். ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் சமூகநீதிக்கும் சம்பந்தம் கிடையாது. தி.மு.க தான் சமூகநீதிக்கான துரோகி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முன்னெடுப்பும் இல்லை. 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கான சூழல் இருக்கிறது. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அமைச்சர் கூறுகிறார். தெலங்கானா, ஒடிசாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

பீகாரில் கணக்கெடுப்பு எடுத்துமுடித்து, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்திருக்கிறது. ஆனால், சமூகநீதி அரசு என சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், இன்னும் அது குறித்து எதுவும் கூறவில்லை. மக்களின் வாழ்வு, அவர்களின் பொருளாதாரம் என மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரிந்துகொள்ள முதல்வருக்கு விருப்பமில்லையா… சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லையென்றால், வேறு பெயர்கூட வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து வலியுறுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்கள் 60 பேர் இறந்த கள்ளக்குறிச்சி படுகொலைக்கு ஏன் சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை. தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவிலிருந்து, ஒரு டி.எம்.சி தண்ணீர்கூட தரமறுக்கிறார்கள் என்றால் இதை எப்படி எடுத்துகொள்வது… காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க இது குறித்து கர்நாடக முதல்வரை சந்தித்து பேச வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதைத் தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க தலைவணங்கி ஏற்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை தொடங்கி விட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125-க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருள்களையும் வெள்ளமாக பாயவிட்டனர். ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3,000 வரை பணம் வழங்கப்பட்டது.

திமுக | விக்கிரவாண்டி

ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை தி.மு.க வழங்கியது. அந்த வகையில் தி.மு.க-வின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.

இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் தி.மு.க-வின் தொண்டர் அணியினராகவே மாறி, தி.மு.க-வின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமன்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது தி.மு.க-வும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. மறுபுறத்தில் பா.ம.க மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது.

ஸ்டாலின் – ராமதாஸ்

பா.ம.க-வினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து தி.மு.க அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். அதைக் கூட தடுக்கும் வகையில் மக்களை அழைத்துச் சென்று பட்டிகளில் அடைத்து வைத்தனர். இத்தனை அடக்குமுறைகளையும் மீறி பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி 56,255 வாக்குகளை குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பா.ம.க வேட்பாளருக்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட 75 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பா.ம.க வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்துக்கும், பா.ம.க-வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பா.ம.க-வுக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து தி.மு.க பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

ராமதாஸ் – ஸ்டாலின்

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 56,261 வாக்குகள் பெற்ற பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ம.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.