‘ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு, ரஷ்ய ராணுவப் பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின், “இந்தியர்கள் எங்கள் ராணுவத்தில் இருப்பதை நாங்கள் எப்போதும் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.
சில இந்திய இளைஞர்கள், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதாகும் முகமது அப்சான், சூரத்தைச் சேர்ந்த 23 வயதாகும் ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா ஆகியோர், உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, உணவு விருந்தொன்றின்போது ரஷ்ய அதிபர் புதினிடம், ‘ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதை நிறைவேற்ற புதினும் உறுதியளித்துள்ளார். 35 முதல் 40 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 10 பேர் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவப் பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின், “நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதியாக இந்தியர்கள் இருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. இது குறித்து ரஷ்ய அதிகாரிகளின் எந்த அறிவிப்பையும் மக்கள் பார்ப்பதில்லை. பெரும்பாலான இந்தியர்கள் பணம் சம்பாதிக்க விரும்புவதால் மட்டுமே இங்கே வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 50, 60 அல்லது 100-க்குள்ளாகவே இருப்பதால், அது எங்கள் ராணுவத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வணிகக் காரணங்களுக்காக மட்டுமே இங்கே பணி செய்கிறார்கள், நாங்கள் அவர்களை வேலைக்குச் சேர்க்க விரும்பவில்லை.
ரஷ்ய ராணுவத்தில் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை செய்வதற்கு உரிய விசாக்கள் இல்லாததால், பெரும்பாலோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர். உக்ரைனுடனான போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒப்பந்தக் கடமைகளின்படி, இழப்பீடு மற்றும் ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb