புதுக்கோட்டை: வனப்பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரௌடி! – நடந்தது என்ன?

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் என சுமார் 64 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. துரையின் சகோதரரான சோமு என்பவர் மீதும் கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சீனிவாச நகர் பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற நகைக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் இருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது. அப்போது, அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்பதற்காக போலீஸார் அவர்களை ஜீப்பில் வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அப்படி திருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே போலீஸ் ஜீப்பில் சென்றபோது, ரௌடிகள் இருவரும் போலீஸாரைக் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரௌடிகள் இருவர் கால்களிலும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து, திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி, ஏற்கெனவே போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்ய முயற்சி நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், இன்று மாலை புதுக்கோட்டை டு திருச்சி மெயின் சாலையில் உள்ள வம்பன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து துரைசாமி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வம்பன் காட்டுப்பகுதி

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸார், ’64-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய துரை, வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அதனடிப்படையில், புதுக்கோட்டை ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீஸார் துரையைப் பிடிக்க சென்றனர். ஆனால், அங்கு மறைந்திருந்த துரை போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தன் கையில் இருந்த அரிவாளால் போலீஸாரை வெட்ட முயற்சித்துள்ளான். அதனால், தற்காப்புக்காக நடந்த துப்பாக்கிச்சூட்டில் துரை இறந்துவிட்டான்’ என்று தெரிவித்துள்ளனர். முதல் என்கவுன்ட்டர் முயற்சியில் தப்பித்த துரை, தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இரண்டாவது முறையாக என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், துரை என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சி சரக டி.ஐ.ஜி மனோகர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருச்சியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவர் போலீஸாரை தாக்க முயன்றதால், என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb