`மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம்!’ – பிபிடிசி நிர்வாகம்

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்ய அரசின் டான்-டீ நிறுவனம் முன் வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிலையில், பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து எஸ்டேட்டுகள் மற்றும் தொழிற்சாலைகள், அடங்கிய  சிங்கம்பட்டி குழுமத்தில் உள்ள பிபிடிசி நிறுவன முன்னாள் தொழிலாளர்கள் தங்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம். தொழிலாளர்களுக்கு 25 சதவீத கருணைத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 75 சதவீத கருணைத்தொகை நாகர்கோவில் உதவி தொழிலாளர் ஆணையரிடம் 3 நாட்களில் வழங்கப்படும்.

மாஞ்சோலை பகுதி மக்கள் செய்தியாளர் சந்திப்பு

நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.எஸ்) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாஞ்சோலை பகுதி மக்கள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், “கடந்த 25 நாட்களுக்கு மேல் எந்த வருமானமும் இல்லாமல் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்த மருத்துவ வசதியும் இல்லாமல் சங்கடப்பட்டு வருகிறார்கள். மாஞ்சோலை பகுதி ஒரு தீவு போல் காட்சியளித்து வருகிறது.

மாஞ்சோலையில் கடந்த 5 தலைமுறைகளாக மலைப்பகுதியில் வாழ்ந்ததால் அவர்களுக்கு கீழே சமவெளிப் பகுதியில் சொந்த இடமோ, சொந்த வீடோ கிடையாது. அவர்களுக்கு தோட்டத் தொழில் தவிர எந்த தொழிலும் தெரியாது. எஸ்டேட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் அவர்கள் அகதிகள் போல ஆகிவிடுவார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டு வர முடியும்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி

கடந்த 1967-ம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்காக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தை உருவாக்கி அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழ்நாடு அரசு உத்திரவாதப்படுத்தியதைப் போல மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்தி மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்டுகளை தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது போல் இங்கு தேயிலைத் தோட்டங்களை தொடர அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88