ஐந்து நாள் ஆன்மீகப்பயணமாக காசி மற்றும் அயோத்திக்கு விமானம் மூலம் செல்வதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 81 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும் என மொத்தம் 106 பேர் சேலத்தை சேர்ந்த சுற்றுலா ஏஜெண்ட் ராஜா என்பவர் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு முன் சுற்றுலா பயணிகளை பஸ், ரயில் மூலம் அழைத்து சென்ற அனுபவமுள்ள ராஜாவுக்கு முதல் முறையாக விமானம் அழைத்து செல்ல வேண்டும் என்பதால் சேலத்திலுள்ள தனக்கு தெரிந்த டிராவல் ஏஜெண்ட் சிவானந்தனிடம், விமான டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை ராஜா கொடுத்துள்ளார்.
உடனே, அனைவருக்கும் புக் செய்துவிட்டதாக கூறி விமான டிக்கெட்டுகளை ராஜாவிடம் சிவானந்தம் கொடுத்துள்ளார். இண்டிகோ விமானம் மூலம் மதுரையிலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து அயோத்தி செல்ல திட்டமிட்டு 106 பேரும் இன்று காலை மதுரை விமான நிலையத்துக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.
அங்கு சோதனையின்போது அவர்கள் காட்டிய டிக்கெட்டுகள் அனைத்தும் போலியானது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்தனர்.
“ஏன் இப்படி ஆனது?” என்று தங்களை அழைத்து வந்த ராஜாவிடம் கேட்டதற்கு, அவரும் பதறிப்போய் புக்கிங் ஏஜெண்ட் சிவானந்த்திடம் கேட்க, `ஆமாம், தவறு நடந்துவிட்டது, அடுத்த வாரம் டிக்கெட் புக் செய்து தருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வந்திருந்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புலம்பினார்கள். இந்த நிலையில், ‘புக்கிங்கில் தவறு நடந்துவிட்டது, வருகின்ற 18-ஆம் தேதி நிச்சயம் விமானத்தில் அயோத்திக்கு அழைத்து செல்கிறேன்’ என்று வந்திருந்தவர்களிடம் ராஜா உறுதி அளிக்க, இதனையடுத்து விமானத்தில் பயணிக்க ஆசையுடன் வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் தங்கள் ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, “இது குறித்து யாரிடமும் எந்த புகாரும் செய்ய விரும்பவில்லை. தவறு நடந்துவிட்டது, வருகின்ற 18-ஆம் தேதி அனைவரையும் அயோத்திக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.
இதுகுறித்து மேலும் விசாரித்ததில், டிக்கெட் எடுக்க ராஜா கொடுத்த பணத்தை சிவானந்தம் தனிப்பட்ட விஷயத்துக்கு செலவு செய்துவிட்டதால் அனைவருக்கும் உடனே டிக்கெட் புக் செய்ய பணம் இல்லாததால் போலியாக டிக்கெட்டை கிரியேட் செய்ததாக சொல்லப்படுகிறது. சுற்றுலா செல்லும் அனைவருக்கும் அவர் தெரிந்தவர் என்பதால் எந்த புகாரும் செய்யாமல் கிளம்பிச் சென்றதாக சொல்லபடுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88