“கட்சி நிலவரத்தைப்போல அதிகாரிகளின் செயல்பாடுகளையும் கவனித்து நடவடிக்கை…’’ – துரைமுருகன்

வேலூர், காட்பாடியில் `மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் காணும் திட்டம்தான் `மக்களுடன் முதல்வர்’ திட்டம். ஸ்டாலின் முதல்வராகும் முன்பே `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், பெட்டிகளை வைத்து மனுக்களைப் போடச்சொன்னார். மனுக்கள் மூட்டை மூட்டையாக அறிவாலயத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டன. பெறப்பட்ட அந்த மனுக்கள் என்னவாகின, என்பது எனக்குமே மறந்துவிட்டது.

துரைமுருகன்

ஆட்சிக்கு வந்தப் பிறகு ஒருநாள் `தம்பி, மூட்டைக் கட்டிப்போட்ட மனுக்கள் என்ன ஆச்சு?’ என்று கேட்டேன். என்னை ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு 400 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு, மாவட்ட வரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

கட்டப்பட்ட மனுக்கள், கட்டப்பட்டதாகவே இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு… அவைகளுக்குச் `செயல் வடிவம்’ கொடுக்கின்ற காரியத்தை பார்த்தபோது, முதல்வரின் கையைப் பிடித்து குலுக்கி நன்றி சொன்னேன். முதல்வருடன் காரில் செல்லும்போதும், மனுக்களை காட்டிக்கொண்டு யாராவது 2 பேர் ஓடி வருவார்கள். காரை நிறுத்தச் செய்து முதல்வரே மனுக்களை வாங்குவார். ஒருத்தரையும் விட மாட்டார்.

துரைமுருகன்

`மனுக்கள் வாங்குவதையே பெரிய காரியமாகச் செய்கிறாய். `தளபதி ஸ்டாலின்’ என்பதைவிட `மனுநீதி ஸ்டாலின்’ என்று சொல்லலாம்’ என அவரிடம் சொன்னேன். `என்னிடம் மனுக் கொடுத்தால்தான் அவர்களுக்குத் திருப்தி’ என்று அவர் சொன்னார். இப்படி, எத்தனையோ நல்லத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். எங்களுடைய கட்சியின் நிலவரத்தை கவனிப்பதைபோன்றே ஆட்சியிலும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் சேகரித்து நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்றார் துரைமுருகன்.