South Korea: `சமூகத்தில் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்களின் தற்கொலை அதிகரிக்கிறது’- அரசியல்வாதி சர்ச்சை

சமூகத்தில் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்களின் தற்கொலை அதிகரிப்பதாகத் தென் கொரிய அரசியல்வாதி கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இதனைத் தெரிவித்திருக்கும், சியோல் நகர கவுன்சிலர் கிம் கி-டக் (Kim Ki-duck) தனது அறிக்கையில், “கொரியா, 2023-க்கு முன்பு வரை ஆணாதிக்க சித்தாந்தம் நிலவிவந்த கடந்த காலத்தைப் போலல்லாமல், ஆண்களை விட 5 சதவிகிதம் அதிகமான பெண்களைக் கொண்ட பெண்ணாதிக்கம் செலுத்தும் சமூகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தில் பெண்களின் அதிக பங்கேற்பு, ஆண்களுக்கு வேலை கிடைப்பதையும், அவர்கள் தாங்கள் திருமணம் செய்ய விரும்பும் பெண்களைக் கண்டுபிடிப்பதையும் கடினமாக்கியிருக்கிறது.

தென் கொரியா

ஆண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஓரளவு காரணம். எனவே, பெண்ணாதிக்க நிகழ்வைச் சமாளிக்க குறுகிய காலத்தில், பாலின சமத்துவ விழிப்புணர்வை மேம்படுத்துவது அவசியம். இதன்மூலம், ஆண்களும் பெண்களும் சமமான உரிமைகளையும், வாய்ப்புகளைப் பெற முடியும். அதோடு, ஆண்களின் சமூகப் பங்கேற்பை விரிவுபடுத்துவதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சியோல் நகர சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிக்கையைப் பதிவிட்டிருக்கும் கிம் கி-டக், கடந்த ஆறு ஆண்டுகளில் ஹான் நதி பாலங்களில் தற்கொலை முயற்சிகள் பற்றிய தரவுகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்தத் தரவுகள், `2018-ல் 430-லிருந்த தற்கொலை முயற்சிகள், 2023-ல் 1,035 ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஆண்களின் சதவிகிதம் 67 சதவிகிதத்திலிருந்து 77 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், ஆண்களின் தற்கொலை முயற்சிகளைப் பெண்களின் சமூக பங்கேற்போடு கிம் கி-டக் இணைத்திருப்பது ஆதாரமற்றது மற்றும் பெண்களுக்கு ஆபத்தானது என பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

தற்கொலை

அந்த வரிசையில், யோன்செய் பல்கலைக்கழகத்தின் (Yonsei University) மனநலப் பேராசிரியரான சாங் இன் ஹா (Song In Han), “போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இத்தகைய கூற்றுகளை முன்வைப்பது ஆபத்தானது. உலகளவில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இங்கிலாந்து உட்பட பல நாடுகளில், 50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்குத் தற்கொலையே பெரிய கொலையாளியாக இருக்கிறது. இதில் ஆண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்புக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறிருக்க, கிம் கி-டக் இப்படி கூறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தென்கொரியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான ஊதிய இடைவெளி குறைந்துவந்தாலும், ஆண்களை விட பெண்கள் 29 சதவிகிதம் குறைவாகவே ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb