வஞ்சிக்கப்படும் மீனவர்கள்: நொச்சிக்குப்பம் லூப் சாலை விவகாரத்தில் என்ன நடந்தது? – Ground Report

இந்தக் கட்டுரை அபிஷேக் ஜெரால்ட் மற்றும் நாராயணி சுப்ரமணியன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.

அபிஷேக் ஜெரால்ட் சென்னையைச் சேர்ந்த கடல்சார் உயிரியல் ஆராய்ச்சியாளர். நீடித்த வளர்ச்சிக்கான கடல் உணவு மற்றும்  வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செய்து வருகிறார்.

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் சூழலியல் அறிவு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 

பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வங்காள விரிகுடா கடலோரப் பகுதிக்கு அருகில் மெரினா லூப் சாலையில் அமைந்துள்ளன. மெரினா கடற்கரையின் இறுதியில் உள்ள கலங்கரை விளக்கத்துக்கு வலது பக்கத்தில் நொச்சிக்குப்பம் அமைந்துள்ளது. 

நொச்சிக்குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையாவின் “டேல்ஸ் ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ மெட்ராஸ்” என்ற நூலில், கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் 1639-ம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு வழங்கப்பட்ட செய்தி இருக்கிறது. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதி உருவாகுவதற்கு முன்னரே இங்கு மீனவர்கள் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. அப்போதிலிருந்தே நிலத்துக்கும் கடலுக்கும் கடல் உணவுகளை விற்பதற்குமான மீனவர்களின் உரிமைப் போராட்டம் தொடங்கிவிட்டது.

1980-களிலிருந்தே நொச்சிக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு அரசுக்கும் மீனவர்களுக்குமான முரண்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. 1985-ம் ஆண்டில் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள், படகுகள், வலைகள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டன. கூவம்/அடையாறு கழிமுகத்தில் படகுகள் நிறுத்திக்கொள்ளுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாள்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தின் இறுதியில் மீனவர்கள்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஐந்து மீனவர்கள் உயிரிழந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்தது. 

 2003-ம் ஆண்டில் பட்டினப்பாக்கம் மேம்பாட்டுத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து போராட்டங்கள் எழுந்ததால் திட்டம் கைவிடப்பட்டது. 2013-ம் ஆண்டுக்கும் 2015-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கலங்கரை விளக்கத்துக்கும் சீனிவாசபுரத்துக்கும் இடையில் ஒரு சாலை போடும் வேலை தொடங்கப்பட்டது. மீனவர்களின் போராட்டத்தையும் மீறி சாலை போடப்பட்டது. லூப் சாலை போடுவதால் மீனவ சமூகத்தினருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று உறுதி தரப்பட்டது.

“மீனவர்களின் வீடுகளை எளிமையாக அணுகவே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசைமாற்று வாரியம்) இந்த சாலையை அமைத்தது” என்று கோஸ்டல் ரிசோர்ஸ் சென்டரின் வலைப்பூவில் உள்ள ஒரு பதிவில் குறிப்பிடுகிறார் சமூக செயற்பாட்டாளர் சரவணன். 

2009 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மீனவர்களுக்கு இரண்டு குடியிருப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு குடியிருப்புக்கு நொச்சி நகர் என்று பெயரிடப்பட்டது. “இந்தப் பகுதிக்கு நகர் என்று பெயர் இட்டதற்குப் பின்னால் ஒரு காரணத்தை சொல்ல முடியும். இந்த மீனவ கிராமத்தை நகரத்தின் ஒரு பகுதியாக மாற்றும் முயற்சி இது” என்று ஃப்சாலா மற்றும் மணலோடிப் பரம்பில் ஆகியோர் தங்கள் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள். நொச்சிக்குப்பம் பகுதியை “அழகுபடுத்தும்” முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

2018-ம் ஆண்டு முதலே வெளியேற்றத்துக்கு எதிராக நொச்சிக்குப்பம் மீனவர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். மெரினா கடற்கரைப் பகுதியில் இருக்கும் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் பிறகு வெவ்வேறு காரணங்களால் அங்கு சிறு போராட்டங்கள் நடந்துவருகின்றன.

2023-ம் ஆண்டு நடந்த போராட்டம்

2023-ம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, தாமாகவே முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தார். லூப் சாலையில் இருக்கும் மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு தரப்பட்டது. இது குறித்து பேசிய டி.ராஜா, “இந்த மாணவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் இங்கு வந்து உட்கார்ந்துகொள்கிறார்கள், வேறு யாராலும் சாலையைப் பயன்படுத்த முடிவதில்லை. அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில் சாலையோரத்தில் இருக்கும் மீன்கடைகள், தற்காலிக கூரை அமைப்புகள் ஆகியவை “ஆக்கிரமிப்புகள்” என்று குறிக்கப்பட்டிருந்தன. சட்டப்படி இவற்றை அகற்றவேண்டும் என்று தீர்ப்பு குறிப்பிட்டது. ஒழுங்கற்ற மீன் கடைகள், ஒழுங்கற்ற பார்க்கிங், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு போன்றவையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. 

“இந்த சாலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது. இங்கு இருப்பவர்கள் சும்மா ஒரு பாலித்தீன் தாளை விரித்து மீன்களை வைத்து மக்களைக் கவர்கிறார்கள். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பீக் ஹவர் காலகட்டத்தில் நெரிசலைக் குறைப்பதற்கான மாற்றாக இந்த சாலை கட்டப்பட்டது. இந்த நோக்கத்துக்கே இந்தக் கடைகள் அச்சுறுத்தலாக இருக்கின்றன” என்று தீர்ப்பில் கூறப்பட்டது. உடனடியாகக் கடைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இந்தப் பிரச்னையைப் பற்றிய ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி கடைகளை அகற்றும் வேலை தொடங்கியது. 55-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான மீனவர்களும் மீன் விற்பனை செய்யும் பெண்களும் இதற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். தங்களது எதிர்ப்பின் குறியீடாகப் படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டினர். மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. வாழ்வாதார இழப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பிரச்னை நொச்சிக்குப்பத்தில் தொடங்கினாலும் அருகில் இருக்கும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர்களும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தின் தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் குமார், இது வியப்புக்குரிய விஷயமல்ல என்கிறார். “மீனவ கிராமங்களிலேயே நொச்சிக்குப்பம்தான் மிகப்பெரியது. அரசாங்கம் எங்களையே வெளியேற்றிவிட்டால் பட்டினப்பாக்கம் போன்ற கிராமங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றாகிவிடும். அதனால்தான் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் சேர்ந்துகொண்டனர். எங்கள் கிராமத்தின் மக்கள்தொகை அதிகம். இங்கு ஏழாயிரம் பேர் இருக்கிறோம். பட்டினப்பாக்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஏழாயிரம் பேரின் மீன் கடைகளையே அகற்றிவிட்டால் ஆயிரம் பேரை வெளியேற்றுவது எளிதுதானே” என்று விளக்குகிறார்.

அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது பெருநகர சென்னை மாநகராட்சி புதிய ஒரு மீன் சந்தை வளாகத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்தக் கட்டுமானத்தில் மீன் விற்க 384 கடைகள் இருக்கும் என்றும், கட்டடத்தின் மொத்த மதிப்பு சுமார் பத்து கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 13-ம் தேதியன்று சில கட்டுப்பாடுகளோடு மீன் விற்பனையைத் தொடர்வதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 17-ம் தேதியன்று சாலையின் மேற்குப் பகுதியில் மீன் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கட்டுப்பாடு விதித்தனர். ஏப்ரல் 17-ம் தேதி போராட்டம் மீண்டும் தொடர்ந்தது. ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18-ம் தேதிகளில் விடிய விடிய போராட்டம் நடந்தது. பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி போராட்டம் கைவிடப்பட்டது.

எதனால் போராட்டம் கைவிடப்பட்டது என்பதை ரஞ்சித் குமார் விளக்குகிறார். “மீன் விற்பவர்களிடம் ஒரு உறுதி தரப்பட்டது. மீன் விற்பதற்காக ஒரு சந்தை கட்டப்படும் என்றும், கடற்கரையில் மீன் விற்கப்படுவதற்கான கட்டுமானங்கள் வரும் என்றும் சொல்லப்பட்டது” என்கிறார்.

போக்குவரத்து நெரிசல்தான் பிரச்னையைத் துவக்கிவைத்தது என்று ரஞ்சித் குமார் தெரிவிக்கிறார். இப்போதும் புதிய கட்டுப்பாடுகளால் பிரச்னை வருகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். “நீதிபதிகள் செல்வதற்கு இது ஒரு முக்கியமான வழியாக மாறிவிட்டது என்பதால், காலையயில் இரண்டு மணிநேரம் மட்டும் தேவைப்படுகிறது என்று முதலில் சொன்னார்கள். பிறகு முதன்மை சாலையில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இந்த சாலை தேவைப்படுகிறது என்றார்கள்.

இதனால் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களின் வண்டியை நிறுத்த முடியாமல் போனது. ஒருவேளை அவர்கள் வண்டியை நிறுத்தினால்கூட அது லூப் சாலையில் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆகவே அரசாங்கம் இங்கு இருக்கும் மீன் கடைகளை அகற்ற முடிவெடுத்தது. இதனால் இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் இருப்பதற்குக் காவல்துறையினரை நியமிக்கத் தொடங்கினார்கள். இந்தக் காரணத்தால் பைக்கிலும் கார்களிலும் மீன் வாங்க வருபவர்களில் பலர்  இங்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். இப்போதுகூட இங்கு ஒரு காவல்துறை அதிகாரி நிற்கிறார் [கை காட்டுகிறார்…]. இது எங்களது வருமானத்தைப் பெரிய அளவில் குறைக்கிறது” என்று விளக்குகிறார்.

சுத்தமும் அழுக்கும்

மீன் கடைகள் “சுகாதாரமற்றவை” என்றும் “பார்க்க அழகாக இல்லை” என்றும் சொல்லப்பட்டன. அவற்றை அகற்றுவதற்கு சுத்தம் ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்போது, “சிங்காரச் சென்னையை உருவாக்குவதுதான் நகரத்தின் நோக்கம் எனும்போது இந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் எப்படி அனுமதிக்கலாம்?” என்ற கேள்வியையும் நீதிபதிகள் அமர்வு எழுப்பியது. இந்த நிகழ்வைப் பற்றித் தன்னுடைய ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் எழுதிய இயற்கையியலாளர் யுவன் ஏவ்ஸ், “அழகு என்பது அடக்குமுறையும் வர்க்க பாகுபாடும் நிறைந்தது. அடக்குமுறை நிறைந்த இந்த அழகுபடுத்துதல் எங்களுக்கு வேண்டாம். மீனவ கிராமங்களும் மீன் கடைகளும் அழகானவைதான்” என்று குறிப்பிட்டார்.

ஒரு கடற்கரைப் பகுதியை அதிகாரிகளும் பார்க்கும் விதமும் அந்தக் கடற்கரையைப் பயன்படுத்துபவர்கள் பார்க்கும் விதமும் வேறு. அழகியலுக்கும் வாழ்வாதாரத்துக்குமான முரண் இது. “அவர்கள் [சென்னை மாநகராட்சி] இந்த இடம் நாற்றமடிக்கிறது, அழுக்காக இருக்கிறது என்கிறார்கள். இந்த இடத்தில் குப்பை நிறைந்திருக்கிறது என்கிறார்கள் [மீன் பெட்டிகளையும் கடைகளையும் காட்டுகிறார்]. இந்தக் குப்பைதான் எங்களுக்கு செல்வம், இந்த நாற்றம்தான் எங்களின் வாழ்வாதாரம். இதை விட்டுவிட்டு எங்கே போவது? அவர்களுக்கு இந்த இடம் நாற்றமடிக்கிறது என்றால் அவர்கள் வேறு எங்காவது செல்லட்டும்” என்கிறார் மீனவப் பெண்மணியும் மீன் விற்பவருமான மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுத்தம் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று மற்ற மீனவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். “அரசாங்கம் தனது குடிமக்களுக்குப் பல சேவைகள் செய்கிறது. இந்த [லூப்] சாலையை சுற்றியுள்ள பகுதிகளையும் ஏன் சுத்தப்படுத்தக் கூடாது? இந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே எங்கள் பொறுப்பு என்றும் இதைப் பயன்படுத்துவதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர்கள் [அரசாங்கம்] சொல்கிறார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் மீனவத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பாளையம். “அரசாங்கத்தால் இந்த இடத்தை [லூப் சாலை] சுத்தமாக வைத்துக்கொள்ளமுடியும்” என்று உறுதியோடு சொல்கிறார் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த முதிய மீனவர் கிருஷ்ணராஜ். “கோயம்பேடு சந்தை எப்போதும் சுத்தமாக இருக்குமா என்ன? எல்லா சந்தைகளும் அழுக்காகத்தான் இருக்கும்” என்கிறார் மெரினா சாலையில் வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும் சிட்டிபாபு.

உலகில் இருக்கும் பல கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டங்கள், நடைப்பயிற்சிக்கான தளங்கள், அழகான சாலைகள், புல்வெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் அந்தக் கடற்கரையைப் பயன்படுத்துபவர்களுடன், குறிப்பாக அந்தக் கடற்கரையை வலையை சேமிக்கவும் படகு நிறுத்தவும் பயன்படுத்தும் மீனவர்களுடன் முரண்படுகின்றன. இது மட்டுமன்றி சில அழகுபடுத்தும் திட்டங்களில் பெரிய கட்டுமானங்கள் வருகின்றன, இது மீனவர்களை வெளியேற்றக்கூடியதாக இருக்கிறது. கடற்கரை அல்லது கடல்சார் பொதுவெளிகள் (Coastal commons) மற்றும் இந்த வெளிகளின் உண்மையான பயனாளர்கள் ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது. 

நகர விரிவாக்கம் எனும் பின்னணியில் மீனவர்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடியவர்களாக சித்திரிக்கப்படுகிறார்கள். இது ஆபத்தானது. சூழலியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் பல மீனவர் சமூகங்கள் கடற்கரைப் பொதுவெளியின் தனியார்மயமாக்கலால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் கடற்கரை சார்ந்த பகுதிகள் தொழில்மயமாகும்போது சிறு மற்றும் குறு மீனவ சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன.

மீனவ கிராமங்களை சுற்றி ஒரு நகரமாக வளர்ந்த சென்னையில் தற்போது பல கடல்சார் பொதுவெளிகள் உண்டு. இந்த நகரம் வளர வளர, மீனவர்களுடனான முரண்களின் அளவும் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. அரசும் பணம் படைத்தவர்களும் கடல்சார் பகுதிகளின்மீது தங்களது அதிகாரத்தை நிறுவ, மீனவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகின்றன. நகரத்தின் அளவு அதிகரிக்கும்போது மீனவ மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், அவர்களது வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. 

மொழியின் அரசியல்

ஊடகங்கள் மற்றும் அதிகார அமைப்புகள் இந்த நிகழ்வை அணுகும்போது ஆக்கிரமிப்பு தொடர்பான சொற்களைப் பயன்படுத்துகின்றன, இது மக்களின் இருப்பை மறுதலிக்கிறது. கடற்கரை என்பது நகரத்துக்கு உடைமையானது என்பது போன்ற பொது சித்திரிப்பும் இருக்கிறது. “ஆக்கிரமிப்பு”, “வந்து உட்கார்ந்துகொள்கிறார்கள்” போன்ற சொற்கள் மீனவர்களின் உரிமையை மறுதலிக்கின்றன.

ஓர் இடத்தின் பெயரில் “குப்பம்” என்ற சொல் இருக்கும்போது அது பொது சமூகத்தால் எதிர்மறையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த முன்முடிவுகளால் மீனவர் போராட்டங்களுக்குப் பொதுவெளியில் கிடைக்கும் ஆதரவும் பாதிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

நொச்சிக்குப்பம் பகுதியில் ஒரு பெரிய மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது. போராட்டத்துக்கு முன்பாகவே, அதாவது 2022-ம் ஆண்டில் இதன் கட்டுமானம் தொடங்கியதாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஜூன் 2024-ம் ஆண்டு நிலவரப்படி இந்தக் கட்டுமானம் கிட்டத்தட்ட முடியப்போகிறது எனலாம். சந்தை வளாகத்தில் பொதுக்கழிப்பிடங்கள், வாகனம் நிறுத்துமிடங்கள், மீன் விற்கும் கடைகள், வடிகால்கள் போன்றவை இருக்கின்றன. இந்த சந்தையில் 384 மீன் கடைகள் இருக்கின்றன. இந்த சந்தையில் கடை ஒதுக்குவதில் சில பிரச்னைகள் இருப்பதாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த சந்தையில் சில சௌகரியங்கள் இருந்தாலும் இதில் பிரச்னைகளும் இருப்பதாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

“முதலில் எல்லோருக்கும் கடைகள் தரப்படும் என்றார்கள். இப்போது பட்டினப்பாக்கம், டுமீங்குப்பம் போன்ற பல மீனவ கிராமங்களுக்கும் கடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்கள். எங்களில் மீதம் இருப்பவர்களுக்கு திருவல்லிக்கேணி, ஜாம் பஜார், எழும்பூர் போன்ற இடங்களில் கடைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கு கடற்கரையில் வாழ்வாதாரம் கொண்டவர்கள் அங்கு போய் எப்படிப் பிழைக்க முடியும்? ஆகவே, சந்தை திறக்கப்பட்டாலும் மீனவர்கள் அங்கே செல்ல மாட்டார்கள். முதலில் எங்கள் கடைகளைப் புகைப்படம் எடுத்தார்கள். ஒரு வருடம் கழித்து யார் யாருக்கு எங்கே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஒரு அட்டை கொடுத்தார்கள், அந்த அட்டையிலிருந்துதான் எங்களுக்கான கடைகள் எல்லா இடங்களிலும் பரவி இருக்கின்றன என்பது தெரியவந்தது. இங்கு அது பிரச்னையாக மாறியது. எங்கள் அனைவருக்கும் இங்கே கடை கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்துவிட்டது. அரசாங்கம் எங்கள் மீனவ கிராமத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் இதே இடத்தில் கடை கொடுத்துவிட்டால் நாங்கள் சந்தைக்கு நகர்ந்துவிடுவோம்” என்று சொல்கிறார் ரஞ்சித்குமார். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் கருத்தையும் கேட்பதன் முக்கியத்துவத்தை இவரது பேச்சு உணர்த்துகிறது.

அடிக்கடி சுனாமி, கடல்சார் பேரிடர்கள் போன்றவற்றால் சூறையாடப்படும் நொச்சிக்குப்பம் கிராமத்தில் மீனவர்கள் ஏற்கெனவே வாழ்வாதார சிக்கல்களை சந்திக்கிறார்கள். இன்னொருபுறம் வீடு ஒதுக்கீடு தொடர்பாக நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்துடனும் இவர்களுக்கு சில முரண்கள் இருக்கின்றன. இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு லூப் சாலைப் பிரச்னை என்பது கூடுதல் சுமையாக இருக்கும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நொச்சிக்குப்பம் மீனவர்களின் குரல் கேட்குமா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்!