Human Trafficking: 15 பெண்களை அடைத்து வைத்துச் சித்ரவதை… இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் கைது!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தம்பதி, வீட்டில் பூச்சிகள் அதிகம் இருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் அந்த வீட்டுக்கு பணியாளர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையிலும் 5 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தனர்.

அடைத்து வைத்து சித்ரவதை

உடனே இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பிரின்ஸ்டன் காவல்துறை, அந்த வீட்டில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான சந்தோஷ் கட்கூரி (31), அவரது மனைவி துவாரகா குண்டா (31), தாசிரெட்டி சந்தன் (24), அனில் மாலே (37) ஆகியோரை கைது செய்து விசாரித்தது. அப்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. சந்தோஷ் கட்கூரி, துவாரகா குண்டாக்கு சொந்தமான ஷெல் நிறுவனங்களில் புரோகிராமர்களாக பெண்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் கொத்தடிமைகளாக கையாளப்பட்டிருக்கின்றனர். அந்தப் பெண்கள் கடத்தி வரப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. மேலும், அந்த வீட்டை சோதனையிட்டபோது, ​​பல லேப்டாப்கள், செல்போன்கள், பிரின்ட்டர்கள் மற்றும் மோசடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எல்லா எலக்ட்ரானிக் கேஜெட்களும் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கைகளின் விவரங்கள் உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை நான்கு பேருக்கும் எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண்கள் குறித்த தகவல்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.