சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளின் போதெல்லாம், அதிகாரிகள் மாற்றம்தான் திமுக அரசின் ஒற்றைத் தீர்வா?!

`ஆம்ஸ்ட்ராங் படுகொலை` செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அதிகாரிகள் மாற்றம்தான் தி.மு.க அரசின் ஒற்றைத் தீர்வா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஜூலை 5-ம் தேதி மாலை பெரம்பூர் பகுதியிலுள்ள தனது வீட்டுவாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கொலை குற்றவாளிகள் `முன்பகை காரணமாக ஒருமாத திட்டமிடலுக்கு பிறகே கொலை செய்தோம்` என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் உளவுத்துறை ஏன் கண்காணிக்கவில்லை. காவல்துறையின் மெத்தனமே படுகொலை நிகழ காரணம் என பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சந்தீப் ராய் ரத்தோர் – அருண்

தி.மு.க ஆட்சியில் அதிகாரிகளை மாற்றுவது இதுவொன்றும் முதன்முறையல்ல எனப் பேச ஆரம்பித்த விவரமறிந்தவர்கள் “2023-ல் மரக்காணம், மதுராந்தகத்தில் கள்ளச்சாராய சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யை பணியிட மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு.

கடந்த 2024 ஜூன் மாதம் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தின்போதும் ஆட்சியரும் எஸ்.பி-யும் மாற்றப்பட்டனர். இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதிகாரிகளை மாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறதா திராவிட மாடல் என்ற கேள்வியை எழுப்புகிறது எதிர்க்கட்சிகள். மறுபுறம் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லையென பேச்சும் வலுக்கிறது” என்றனர்.

நிர்மல் குமார்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் ஐடி விங்க் துணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், “தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 350 முறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் முன்பகையால் கொலை, கொள்கை, சாதிய ரீதியான வன்கொடுமைகள், போதையால் அரங்கேறும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. எனவே தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டியது அணுகுறையில் மாற்றம்தானே தவிர, அதிகாரிகள் மாற்றமில்லை. காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சிறப்பாகிவிடுமா? நிர்வாகம் சரியாக இருந்து, முதலமைச்சர் துறையை முறையாக நிர்வகித்து இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சட்டம் ஒழுங்கு குறித்தும் மக்கள் பாதுகாப்பும் குறித்தும் எந்த அக்கறையுமில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் சுந்திரமாக செயல்பட்ட காவல்துறையை கட்டிப் போட்டிருக்கிறது தி.மு.க அரசு. ஆளும் கட்சியினரின் அழுத்தம் அதிகரிக்க, குற்றச்சம்பவங்களும் கூடுகிறது. சொல்லப்போனால் ஆட்சி செய்யும் திறனற்ற தி.மு.க, அதிகாரிகளை பலிகிடாவாக்கி தப்பிக்கப் பார்க்கிறது. காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா தி.மு.க முதல்வர் பதவி விலகினால்தான் மக்களுக்கு விடிவுகாலம்” என்றார் கோபத்துடன்.

ஹிம்லர்

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஹிம்லர் “ஒரு குற்றம் நிகழ்ந்தால் அதிகாரிகளை மாற்றுவதை மட்டுமே நடவடிக்கை என கருதுகிறாரா தமிழ்நாடு முதலமைச்சர் என்றே கேட்க தோன்றுகிறது. காவல் அதிகாரிகளுக்குத்தான் பொறுப்பு என்றால், விழிப்புடன் செயல்பட்டு, காவல்துறையை ஒவ்வொரு முறையும் கண்காணிக்க தவறும் கையாளாகாத முதலமைச்சருக்கும் அரசுக்கும் பொறுப்பில்லையா? சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம் என்பது அரசுக்கெதிராக கொதித்தெழுந்திருக்கும் சமூகத்தை அமைதிப்படுத்தும் கண்துடைப்பு நடவடிக்கை.

குற்றங்களையும் தடுக்காத.. நிகழ்ந்தபின் குற்றவாளிகளையும் பிடிக்காத இந்த அரசு சட்டம் ஒழுங்கை காப்பதில் அப்பட்டமாக தோற்றுப்போயுள்ளது. பல்வேறு குளறுபடிகளை கொண்டிருந்தாலும் அ.தி.மு.க ஆட்சி எவ்வளவோ மேல் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டது” என்றார்.

அமுதரசன்

தி.மு.க மாணவரணி துணைச் செயலாளர் கா.அமுதரனிடம் பேசினோம், “முதலில் காவல் அதிகாரிகள் மாற்றத்துக்கும் படுகொலை சம்பவத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது இயல்பான நடவடிக்கைதான். படுகொலை சம்பவம் நிகழ்ந்த அன்றே 8 பேரை கைது செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையில் குற்றவாளிகள் கொலைக்கான காரணத்தையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரிக்க 8 தனிப்படையும் அமைத்திருக்கிறோம். இத்தணைக்கும் பிறகும் தி.மு.க மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் முதலமைச்சர்மீது தி.மு.க மீது அவதூறுகளை பரப்பி படுகொலை சம்பவத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றன எதிர்க்கட்சிகள். மேலும் இந்த விவகாரத்தோடு கள்ளச்சாராய சம்பவங்களை ஒப்பிடுவதே மிகத் தவறு. இதற்கிடையில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லையென எதனடிப்படையில் சொல்கிறார்கள் என்றும் புரியவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88