நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது. மறுபக்கம், 2019-ல் பெற்ற இடங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்காக 99 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. கூடவே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.
மக்களவையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது முதல் உரையில், `தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்பு ஆகியவற்றையே பேசுகிறார்கள்’ என்று பா.ஜ.க-வைத் தாக்கினார். கூடவே, சிவனின் படத்தைக் காட்டி, `இதிலிருப்பது அபயமுத்ரா. இது அச்சமின்மை, உறுதி, பாதுகாப்பின் சைகை. இதுதான் காங்கிரஸின் சின்னம்’ என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, `ஒட்டுமொத்த இந்துக்கள் மீதான தாக்குதல்’ என ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், அடுத்த கணமே ராகுல் காந்தி, `மோடியோ, பா.ஜ.க-வோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் அல்ல’ என்றார்.
இந்த விவகாரத்தை பா.ஜ.க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், ராகுலும், காங்கிரஸும் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கூறின. இவ்வாறிருக்க, கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
நேற்று இதைத் தெரிவித்த மங்களூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி, “இவ்வாறு செய்வது ஏழு முதல் எட்டு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்ய வழிவகுக்கும். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மங்களூருக்கு வந்தால் இதை அவருக்கு ஏற்பாடு செய்வோம். சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தால், அவர் சாம்பலாகிவிடுவார். இந்துக்களைப் பற்றி என்ன சொன்னாலும் இந்துக்கள் அமைதியாகக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். இந்துக்களுக்கு எதிரான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் அவர் குரைத்தால் உள்ளூர் தலைவர்கள் இங்கு வாலை ஆட்டத் தொடங்குவார்கள்.
இந்துக்களும், இந்துத்துவாவும் வேறு வேறு என்று காங்கிரஸ் கூற ஆரம்பித்துவிட்டது. இத்தகைய தலைவர்களால் இந்துக்கள் எதிர்காலத்தில் ஆபத்தைச் சந்திக்க நேரும். இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையை அவர்கள் உருவாக்குவார்கள். சிவாஜியும் மகாராணா பிரதாப்பும் இந்து சமூகத்தில் பிறந்தவர்கள்தான். தேவைப்படும்போது நாங்கள் ஆயுதங்களை எடுப்போம். ஆயுதங்களை வணங்கிவிட்டு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நாடாளுமன்றத்தில் பலமான அறைக்குப் பிறகு ராகுல் காந்தி சரியாகிவிடுவார்” என்று கூறினார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, அவரைக் கைதுசெய்யுமாறு மங்களூரு காவல் ஆணையரிடம் காங்கிரஸ் புகாரளித்திருக்கிறது.