`கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கீகளாக, பூர்ஷ்வாக்களாக மாறிவிட்டார்கள்…’ – திலகபாமா விமர்சனம்

“ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என தி.மு.க அரசை தட்டிக்கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சியினர், பூர்ஷ்வாக்களாக, சங்கீகளாக மாறிவிட்டீர்களா என்று கேட்கும் அளவிற்குச் செயல்படுகிறீர்கள்…” என்று பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில்

செங்கோல் குறித்து சு.வெங்கடேசன் பேசியதற்கு எதிராக தமிழர் தேசம் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா, செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செங்கோலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவமரியாதையாகவும், தமிழ் மன்னர்கள் குறித்து தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.

எழுத்தாளருக்கு வரலாறு தெரியவில்லை போல, பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் மன்னர்களைத்தான் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அவருக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா இருக்கிறது. எத்தனை தமிழ் மன்னர்கள் வரலாற்றில் இந்த மண்ணில் மக்களுக்காக நீதி வழங்கியுள்ளார்கள். அதிலும் செங்கோல் வளைந்ததற்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த இந்த மதுரை மண்ணிலிருந்துகொண்டு சு.வெங்கடேசன் இப்படி பேசியிருப்பதை பா.ம.க சார்பில் வன்மையாக கண்டிருக்கிறோம்.

 இதனைக் கண்டித்து தொடர்ந்து பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசுவதில்லை, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பேசாமல் பொதுகூட்ட மேடை போல நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

திலகபாமா

விக்கிரவாண்டி தேர்தல் புதிய சரித்திரத்தை கொண்டு வரும். மக்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் மனநிலையில் உள்ளனர், அவ்வளவு மோசமாக திமுக ஆட்சி நடக்கிறது. மக்கள் வேறொரு களத்தை காண எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். விக்கிரவாண்டி அதனை நிரூபிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை நம்மையெல்லாம் பதற வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்னவாக இருக்கிறது என்கிற கேள்வி நம் முன் நிற்கிறது. ஒரு பக்கம் கஞ்சா, போதைப்பொருளுக்கு எதிராக இந்த அரசால் பெயரளவிற்கு ஒன்றிரண்டு திட்டங்களைத்தான் சொல்ல முடிகிறதே தவிர, தமிழகத்தில் எல்லா இடத்திலும் எல்லா போதைப்பொருள்களும் கிடைக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் நடைபெறும் மரணங்கள் அதிகரித்திருக்கிறது. மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து இறந்து கிடக்கிறார்கள். அதையெல்லாம் மதுவால் இறந்ததாக அரசு கருதவில்லை, அரசின் அலட்சியத்தால் அராஜகத்தால் இவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் வசூல் பண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்ததற்கு பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள்.

இந்த மாதிரியான போக்குகளில் தான் தமிழக அரசு இருக்கிறது. திமுக இதனை கொண்டாடி கொண்டிருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பில்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காகவும், கள்ளச்சாரய மரணத்தை எதிர்த்தும்… திமுக அரசை தட்டிக்கேட்க வேண்டிய சு.வெங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சியினரே நீங்கள் பூர்ஷ்வாக்களாக, சங்கீகளாக மாறிவிட்டீர்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறீர்கள். மதுரை மண்ணிலிருந்து செங்கோலுக்கு எதிராக நீங்கள் இப்படி பேசியிருக்கக் கூடாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb