பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, நேற்று மாலை பெரம்பூரில் தனது வீட்டருகே ஆம்ஸ்ட்ராங் நின்றுகொண்டிருந்த போர் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
பின்னர் தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பின்னர், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அங்கிருந்து சென்னை சென்ரலிலுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், எட்டு பேர் இந்தக் கொலை தொடர்பாக போலீஸில் சரணடைந்திருக்கின்றனர்.
சிபிஐ விசாரணை கேட்டு பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள் போராட்டம்:
ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை கண்டித்தும், இதில் சிபிஐ விசாரணை கோரியும் பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள் சென்னை சென்ரலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவே, போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்து போலீஸ் வேனில் ஏற்றி அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர்.
இன்னொருபக்கம், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உட்பட எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆளும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
மாயாவதி:
BSP தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்துக்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர், மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். இவரின் படுகொலை சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றவாளிகளை மாநில அரசு தண்டிக்க வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை சென்னை வர திட்டமிட்டிருக்கிறேன். அமைதி காக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ராகுல் காந்தி:
கொடூரமாக ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் பேரதிர்ச்சியடைந்தேன். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
எடப்பாடி பழனிசாமி:
ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். அவரை இழந்து வாடும் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தொண்டர்கள், அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது… கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது… காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா தி.மு.க முதல்வருக்கு எனது கடும் கண்டனம். கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்:
வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரின் கொள்கைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பட்டியலின மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொண்டவர். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு, வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா… அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா… என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை:
ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
சீமான்:
ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்… திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா… அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா… காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்… இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா… இந்தப் படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டும்.
பிரேமலதா:
ஒரு தேசிய கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்திகேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். தொடர்ந்து இதுபோன்ற படுகொலைகள் நடந்துவருவது அனைவர் மத்தியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடும், கஞ்சா, டாஸ்மாக், கள்ளச்சாராயம் போன்ற போதைப்பொருள்களின் உபயோகம் அதிகமாக இருப்பதால்தான் இதுபோன்ற படுகொலைகள் நடந்துகொண்டிருக்கிறது. தேசிய கட்சியின் மாநில தலைவரே வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார் என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது… இந்தக் கொலையை செய்தவர்களையும், கொலைக்கான காரணத்தையும் தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடித்து, கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும்.
திருமாவளவன்:
ஆர்ம்ஸ்ட்ராங்கை சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர் ஆர்ம்ஸ்ட்ராங். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
கமல்:
ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
விஜய்:
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரின் கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88