Kejriwal: `ED வழக்கறிஞரும், டெல்லி நீதிபதியும் சகோதரர்கள்!’ CJI-க்கு வழக்கறிஞர்கள் 150 பேர் கடிதம்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கிறார். இடையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறையில் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால், அமலாக்கத்துறை உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற ஜாமீன் உத்தரவின்மீது அடுத்தநாளே இடைக்கால தடை வாங்கியது. அதையடுத்து, இதே மதுபான கொள்கை வழக்கில் சிறையிலேயே கெஜ்ரிவாலை சிபிஐ கைதுசெய்ய, மறுபக்கம் கெஜ்ரிவாலுக்கு பிறப்பிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்துசெய்தது.

இவ்வாறிருக்க, ஆம் ஆத்மி சட்டப் பிரிவுத் தலைவர் சஞ்சீவ் நசியர் உட்பட 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், “டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் முன்னெப்போதும் இல்லாத சில நடைமுறைகள் காணப்படுவது குறித்து நாங்கள் சட்டத்துறை சார்பாக எழுதுகிறோம். உயர் நீதிமன்றங்கள் வழக்குகளால் அடைக்கப்படாமல் இருக்க, விசாரணை நீதிமன்றங்கள் விரைவான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியை மேற்கோள் காட்டி, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிந்து கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினார்.

அமலாக்கத்துறை

இருப்பினும், அடுத்த நாளே அமலாக்கத்துறை இந்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. அதுவும், ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்கத்துறையால் செய்யப்பட்டது என்பதுதான் இதை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்குகிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை.

விசாரணை நீதிமன்றங்களின் விடுமுறைக் கால நீதிபதிகள் எந்த முக்கிய உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கூறப்படுவது, விடுமுறைகால அமர்வுகளை அமைப்பதன் நோக்கத்தைத் தோற்கடித்திருப்பதுடன், விசாரணை நீதிமன்றங்களை விரைந்து முடிவெடுக்குமாறு கோரிய தலைமை நீதிபதியின் அறிக்கைகளின் உணர்வையும் மீறுகிறது. இதன் விளைவாக, விடுமுறையில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை வைத்திருந்த பல வழக்கறிஞர்கள், தங்கள் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அத்தகைய நிர்வாக உத்தரவுக்கு எதிராக மிகவும் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறையின் வழக்கறிஞராக அனுராக் ஜெயின் வாதாடுவதால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் அவரின் சகோதரர் சுதிர் குமார் ஜெயின் தாமாக முன்வந்து தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்திருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88