தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். பிறகு, ‘தொகுதியை காலியானதாக அறிவித்ததுடன் வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது. மறுபக்கம், ‘தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள்’ என்று கூறி அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் தி.மு.க, பா.ம.க, நா.த.க ஏற்பட்டிருக்கும் மும்முனைப் அதகளமாகியிருக்கிறது விக்கிரவாண்டி தேர்தல் களம்.

Dr. அன்புமணி ராமதாஸ்

குறிப்பாக அங்கீகாரத்தை இழந்து நிற்பதாலும் வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதாலும் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என் கங்கணம் கட்டி கொண்டு வேலை செய்கிறது, பா.ம.க. 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து தி.மு.க-வுக்கு எதிராக கடும் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் மைக் பிடித்த பா.ம.க தலைவர் அன்புமணி,”தி.மு.க வேட்பாளர் சிவா வெற்றி பெற்றால் அவர் நன்றாக இருப்பார். ஆனால் பா.ம.க வெற்றி பெற்றால் நீங்கள் நன்றாக வாழ்வீர்கள். தி.மு.க-வின் இருண்ட காலம் தற்போதைய ஸ்டாலின் ஆட்சிதான்.

வாக்குகளை காசு கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். கள்ளகுறிச்சியில் இறந்தவர்களை தி.மு.க அரசு கொலை செய்துள்ளது. இத்தேர்தலில் தி.மு.க பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு மக்கள் வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால், நாம் பணத்திற்கு மயங்குபவர்களா.. இத்தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே என்று நினைத்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்கு கூட தி.மு.க-வுக்கு விழக்கூடாது. அ.தி.மு.க-வினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி தி.மு.கதான். எனவே நீங்கள் பா.ம.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

இதேபோல் தி.மு.க அமைச்சர்கள் குழு விக்கிரவாண்டியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்கள். வெற்றி பெறவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை எச்சரித்து இருக்கிறது. இந்த சூழலில்தான் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில், “பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர்தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க ஆட்சி. சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.

நா.த.க வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளர் சீமான், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என எல்லோரும் வந்து கோடிக்கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள். இதுதான் இங்கு கலாச்சாரம். இது ஒரு கேவலம். கேடுகெட்ட நிலை. அ.தி.மு.க, தே.மு.தி.க-வில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது எதிரி தி.மு.க-வை விரட்ட உதவுங்கள். எத்தனையோ முறை உங்கள் கூட்டணியில் இல்லாதபோதும் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனவே இம்முறை எனக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார். இவ்வாறு மூன்று கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருவதால் விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் தகித்து கிடக்கிறது.

சீமான்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாத சூழல். தி.மு.க, பா.ம.க, நா.த.க இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வரும் 2026 தேர்தலில் கூட்டணி பேரம் நடத்துவதற்கு பா.ம.க வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குதான் வாய்ப்பு அதிகம். அதேநிலைதான் இங்கும் ஏற்படும். ஆனால் அ.தி.மு.க வாக்கு யாருக்கு என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறது. நா.த.க சீமான்தான், “அ.தி.மு.க, தே.மு.தி.க-வில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என முதலில் வாக்கு கேட்டார். பிறகு பா.ம.க தலைவர் அன்புமணி, “அ.தி.மு.க-வினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி தி.மு.கதான். எனவே நீங்கள் பா.ம.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இந்த சூழலில்தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, வேறு பிரச்சினைக்கு வழிவகை செய்திருக்கிறார். “அ.தி.முக பயந்துவிட்டதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை. அழியப்போகும் கட்சி” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இறுதியாக, “அ.தி.மு.க தொண்டர்கள் பா.ம.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்” என சொல்கிறார். அ.தி.மு.க-வை திட்டிவிட்டு பா.ம.க-வுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டால் அக்கட்சி தொண்டர்கள் அதை செய்வார்களா?. இதன் மூலம் பா.ம.க தோல்வியடைய வேண்டும் என அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறாரோ என்கிற கேள்வி எழுகிறது?.

குபேந்திரன்

ஆனால் அ.தி.மு.க தலைமை யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அக்கட்சி தலைமை உத்தரவு போட்டிருப்பதாக தகவல். ஆனால் அதற்கு நிச்சயம் வாய்ப்பு குறைவு. இதனால் தி.மு.க-வுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். பா.ம.க-வுக்கு வாக்களித்தவர்கள் கூட தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாம். தேர்தல் முடிவில் யார் அதிகம் வாக்குகள் கிடைத்துள்ளது என்பதில் பெரிய விவாதமே நடக்கும். தற்போதைய நிலவரப்படி தி.மு.க முதல் இடமும், பா.ம.க இரண்டாம் இடமும், நா.த.க மூன்றாம் இடமும் பெரும் சூழலே உள்ளது. இறுதியாக வெளியாகும் தேர்தல் முடிவுகள் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88