கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 65 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்…

அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, வைகோ மகன் துரை வைகோ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட பலரும் சென்றனர். தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அதேவேளையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு கள்ளக்குறிச்சியில் முகாமிட்டிருந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.

பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாததை போல, முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு செல்லாததையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடவில்லை என அறிவித்தது. சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் தி.மு.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,“ஜூலை 10-ம் நாள் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், தி.மு.க சார்பில் ஆற்றால்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவ சண்முகத்துக்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுகொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவ சண்முகத்தை உங்களுக்கு தனியே அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான் அன்னியூர் சிவா. 1986-ம் ஆண்டு முதல் அவரை பார்த்துகொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத தலைவர் கலைஞருடைய உடன் பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞர் பாணியில் சொல்வதானால், தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்.

முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக, ஒன்றுபட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக, அன்னியூர் கூட்டுறவு விவசாய சங்கத் தலைவராக, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், தற்போது விவசாய தொழிலாளர் அணியுடைய மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திலிருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை தரப்போகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் படித்து, கல்லூரி கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோரும் ரூ.1000 தரப்படுகிறது. இதே மாதிரி மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் தரப்போகிறோம். இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கிற வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசு என்றாலே சமூக நீதி அரசு. இது உங்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும். பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியது தலைவர் கலைஞர்தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி தி.மு.க ஆட்சி.

பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி தி.மு.க ஆட்சி. அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்திருக்கிறோம். கழகம் வளர்த்த கொள்கை குன்றான கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கி சூட்டில் பலியான சமூகநீதி போராளிகளுக்கான நினைவகம் கட்டி வருகிறோம். இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்துவைக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியும், மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தியும் இந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் பொதுவான நலத்திட்டங்கள் தொடர உங்களுடைய ஆதரவு வேண்டும். சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க கூட்டணி தோற்கடிப்பதன் மூலம், சமூக நீதிக்கு துரோகம் இழைக்கிறவங்களுக்கு தக்க பாடம் புகட்ட உங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.