சேலம்: 2 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சியர்!

தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதல் சட்டசபைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கல்வியும், மருத்துவமும் தனது இரண்டு கண்களாக நினைத்து, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் முதலமைச்சர். அதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல… அது பெருமையின் அடையாளம்” எனக் கூறினார்.

அரசு உயர்நிலைப்பள்ளி

இந்த நிலையில் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொன்னி அம்மாள் ரங்கசாமி அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலி வேலைக்குச் செல்லக்கூடிய ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவுக்கான விருதினை, இந்தப் பள்ளி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுள்ளது.

மேலும் முதலமைச்சரின் பசுமை மிஷன் திட்டத்திலும் முதலிடம் பெற்ற பள்ளியாக இந்த அரசுப் பள்ளி விளங்குகிறது.

ஆனால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாமலும், முறையான பஸ் வசதி இல்லாமலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இ.புதுபாளையம், துத்திபாளையம், நாய்க்கன் வலவு, மயில்புறாகாடு, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், மாவெளிபாளையம், ஒழுகுபாறை, சங்ககிரி கெமிக்கல் பிரிவு போன்ற பகுதிகளிலிருந்து இந்தப் பள்ளிக்கு படிக்க வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்கு பஸ் வசதி இல்லாமல் இருந்துள்ளது. அதனால் பெற்றோர்களே தங்களது சொந்த செலவில் வேன் வாடகைக்குப் பிடித்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்து வந்துள்ளனர்.

பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ்

இந்த நிலையில், இது குறித்த தகவல் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியின் கவனத்திற்குச் சென்றிருக்கிறது. உடனே போக்குவரத்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆட்சியர், மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவர ஏதுவாக அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்தைத் தொடங்க வழிவகை செய்யுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பள்ளியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் அரசு பஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியரின் நடவடிக்கை, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb