பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் பதவியை இழக்கிறார்.
பிரிட்டனில் மொத்தமுள்ள 650 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியிருக்கிறது. அங்கு, ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 326 இடங்களைப் பெற வேண்டும்.
2019 தேர்தலில் 364 இடங்களைப் பிடித்த கன்சர்வேடிவ் கட்சி, இந்த முறை 119 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களில் ஜெயித்திருக்கிறது. 2019 தேர்தலில் 203 இடங்களை தொழிலாளர் கட்சி பெற்றிருந்தது. தற்போது, தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றவுடன், பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கான ஆர்வம் அனைத்துத் தரப்பினரிடமும் காணப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் தான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 61 வயதாகும் ஸ்டாமர் ஒரு வழக்கறிஞர். முதன்முறையாக 2015-ம் ஆண்டு எம்.பி-யாக இவர் வெற்றிபெற்றார்.
கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை கியர் ஸ்டார்மர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், கட்சியின் தலைவரான பிறகு, தற்போது பிரிட்டன் பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது தொழிலாளர் கட்சி.
தொழிலாளர் கட்சியான சோசலிச கொள்கைகளைக் கொண்டிருக்கக்கூடிய, உழைக்கும் வர்க்கத்துக்கான ஒரு கட்சியாக செயல்பட்டுவருகிறது. திட்டமிடப்பட்ட பொரளாதாரத்தை ஆதரிக்கும் தொழிலாளர் கட்சி, பிரிட்டிஷ் தொழில்துறையை மறுகட்டமைப்பு செய்வது, குடிமக்கள் அனைவருக்கும் கவுரவமான வீட்டுவசதி, இலவச – குறைந்த கட்டத்தில் பொதுப்போக்குவரத்து வசதி போன்றவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டிருக்கிறது.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருப்பதை தொழிலாளர் கட்சி எதிர்க்கிறது. நேட்டோவிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியின் கொள்கை. பாலஸ்தீன விடுதலைக்கான போராட்டத்தை தொழிலாளர் கட்சி ஆதரிக்கிறது.
இந்த நிலையில், தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கியர் ஸ்டார்மர், ‘நாம் சாதித்துவிட்டோம். மாற்றம் இப்போது தொடங்குகிறது’ என்றார். அவர் தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் முகப்பில்கூட ‘மாற்றம்’ என்றுதான் வைத்திருக்கிறார்.
ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பிரிட்டனில் புதிய அரசைத் தேர்வு செய்வதற்காக ஜூலை 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகள் 2023-ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்டன.
தொழிலாளர் கட்சியின் வெற்றி குறித்து பேசிய கியர் ஸ்டார்மர், ‘இவ்வளவு பெரிய வெற்றியின் மூலம் மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு வந்திருக்கிறது. முதலில் எங்களுக்கு நாடு முக்கியம்.. இரண்டாவதுதான் கட்சி’ என்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்தித்து, புதிய அரசை அமைப்பதற்கான அனுமதியை ஸ்டார்மர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88