திண்டுக்கல் மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் அன்பு (எ) புவனேஸ்வரன் (25). இவர், திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் திருப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்ததுடன், அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோவை தனது செல்போனில் எடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்தும்போது அன்பு, அவருடைய நண்பரான தமிழரசனிடம் சிறுமியின் புகைப்படம், வீடியோக்களை காட்டியுள்ளார். அந்த புகைப்படம் வீடியோக்களை அன்புவிடமிருந்து பெற்ற தமிழரசன் சிறுமியின் தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்தப் பிரச்னை தொடர்வதை விரும்பாத சிறுமியின் தந்தை சுந்தர்ராஜன் தமிழரசனின் நண்பரான செல்லதுரையிடம் நண்பர்போல் பழகியுள்ளார்.
தனது மகளின் வீடியோவை எப்படியாவது அன்புவின் செல்போனில் இருந்து எடுத்து அழிப்பதுடன் அன்புவை கொலை செய்ய உதவுமாறு செல்லதுரையிடம் கேட்டுள்ளார். அவரும் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே சுந்தர்ராஜன், தமிழரசனின் நண்பரான செல்லத்துரை மற்றும் அன்பு ஆகியோர் நேற்று இரவு திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி உள்ளனர்.
தொடர்ந்து செல்லத்துரை அன்புவிடம் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறி திருப்பூர், காந்திநகர் அருகே உள்ள ஏவிபி லேஅவுட்டில் உள்ள அங்கயர் செல்வன் என்பவரின் வீட்டுக்கு அன்புவை அழைத்து வந்துள்ளார். அங்கு காரை விட்டு முதலில் செல்லத்துரை இறங்கி பின்பு அன்புவை இறங்கி வருமாறு கூறியுள்ளார். செல்லத்துரையை நம்பிய அன்பு காலிலிருந்து இறங்கியதும் அங்கையர் செல்வனின் வீட்டில் பதுங்கி இருந்த 8 பேர் கொண்ட கும்பல் அன்புவை துரத்தி துரத்தி சரமாரியாக கழுத்து, முகம், தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்தனர். இதில் அன்பு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் அன்புவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையான சுந்தர்ராஜன் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.