நாடாளுமன்றத்தில் ராகுலின் சாடலும், மோடி ‘டீல்’ செய்த விதமும்! – ஓர் அலசல்

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ராகுல் காந்தி முன்வைத்தார்.

ராகுல், மோடி

கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கு வரும் பிரதமர் மோடி, அவைக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த முறை ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார். ராகுல் காந்தியும் நூறு நிமிடங்கள் உரையாற்றினார். அந்த நூறு நிமிடங்களும் ராகுலின் பேச்சால் மக்களவையில் அனல் வீசியது.

கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான விவாதங்களில் பங்கெடுக்காத பிரதமர் மோடி, பா.ஜ.க-வையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும், பிரதமர் மோடியையும் கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்தபோது எழுந்து நின்று இருமுறை குறுக்கிட்டார்.

பிரதமர் மோடி

அப்போது பாஜகவினர் குறித்து ராகுல் காந்தி சொன்ன கருத்தை, `ஒட்டுமொத்த இந்துக்களையும் வன்முறையாளர்கள் என்று குறிப்பிடுவது தவறு’ என மோடி குற்றம்சாட்டினார்.

அதற்கு ராகுல் காந்தி, பதில் கொடுதார். எனினும் ராகுல் காந்தி இந்துக்கள் என சொன்ன கருத்து மறுநாள் சபாநாயகரால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

ராகுல் காந்தி

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மோடி குறித்து ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்காத பிரதமர் மோடி, ‘மக்களவையில் பொய்யான தகவல்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும், ‘மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்வியை மறைப்பதற்காக ராகுல் காந்தி நாடகமாடுகிறார்’ என்ற ரீதியிலான பதில்களை பிரதமர் மோடி அளித்தார்.

பிரதமர் மோடி

‘சிறுபிள்ளைத்தனமாவர்’ என்றும் ராகுல் காந்தியை மோடி விமர்சித்தார். ’400 இடங்களில் ஜெயிப்போம் என்று சொன்ன பா.ஜ.க., 240 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறது’ என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த மோடி, ‘மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்டது’ என்று சாடியதுடன், ‘மக்களவையின் மொத்த பலம் 543 என்ற நிலையில், 100-க்கு 99 இடங்களில் ஜெயித்துவிட்டது போல காங்கிரஸ் நடந்துகொள்கிறது’ என்றார்.

அக்னிபத், வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவகாரங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல் காந்தி. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த பா.ஜ.க., கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது ராகுல் காந்தி தொடர்ந்து முன்வைத்துவரும் குற்றச்சாட்டு.

விவசாயிகள் போராட்டம்

ராகுல் காந்தி மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் அந்தக் கோரிக்கையை இன்னமும் எழுப்பிவருகிறார்கள். போராட்டங்களையும் அவர்கள் தொடர்கிறார்கள்.

அதேபோல அக்னிபத் திட்டம். பா.ஜ.க அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் வட மாநிலங்கள் பற்றியெரிந்தன. மேலும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க பல தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கு அக்னிபத் திட்டத்தால் இளைஞர்களிடம் ஏற்பட்ட கோபம் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி

இந்த நிலையில்தான், அக்னிபத் விவகாரம் குறித்தும் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். ஆனால், அக்னிபத், வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவகாரங்கள் மீதான ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இந்த விவகாரங்களில் அவையை தவறாக வழிநடத்தினார்’ என்றார். ஆரம்பத்தில் ‘பப்பு’ என்று ராகுல் காந்தியை கிண்டல் செய்த மோடி, இந்த மக்களவைத் தேர்தலின்போது ‘இளவரசர்’ என்றார். தற்போது ‘சிறுபிள்ளைத்தனமாக’ பேசுகிறார் என்று ராகுலை விமர்சிக்கிறார் மோடி.

கடந்தமுறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது, தேர்தலுக்கு பின் காங்கிரஸ் பார்வையாளர் மாடத்துக்கு சென்றுவிடும் என்று பேசி இருந்தார். ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக அமர்ந்திருக்கிறது. ராகுலின் உரைக்கு நடுவே மோடியே இருமுறை எழுந்து பதில் சொல்லி இருக்கிறார். அமித் ஷா, அனுராக், ராஜ்நாத் சிங் என மத்திய அமைச்சர்களும் பதில் சொல்லி இருக்கிறார்கள். மொத்ததில் எதிர்வரும் 5 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு நாடாளுமன்றத்தில் சற்று வீரியத்துடன் இருக்கும் என்பது மட்டும் முதல் கூட்டத்திலே தெரிகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88