புதிய குற்றவியல் சட்டங்களின் எதிர்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?!

மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்திருப்பது ஏன்?

நாடாளுமன்றம்

கடந்த 2023-ம் ஆண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) ஆகிய மூன்று சட்டங்கள் முறையே, பாரதீய நியாய சன்ஹிதா (BNS), பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா(BNSS), பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என இந்தியில் பெயர்மாற்றம் செய்து, அவற்றில் பல்வேறு சட்டதிருத்தங்களை மத்திய அரசு செய்தது. அப்போதே இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மாற்றம் செய்த இந்த மூன்று சட்டங்களையும் ஜூலை 1-ம் தேதிமுதல் அமல்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றங்களின்படி, “18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு, சிறு குற்றங்கள் புரிவோரை சமூகப்பணிகளில் ஈடுபடுத்தும் சட்டப்பிரிவு, நாட்டின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதி, கைது அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொது தொடர் மற்றும் கொடூர குற்றவாளிகளுக்கு மட்டுமே கைவிலங்கு இட அனுமதி, காவல்துறையினர் விளக்கமளிக்காமல் ஒருவரை 24 மணி நேரத்திற்கு மேல் விசாரணையில் வைத்திருக்க முடியாது, சோதனைகள் மற்றும் பறிமுதல்களை காணொளி வாயிலாக காட்சிப்படுத்துவது கட்டாயம், பெண்களை திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியளித்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, நீதிமன்ற நடைமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதையும் உறுதிசெய்வது” உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டம் – ராகுல் காந்தி – மோடி

அதேசமயம் கடுமையான விமர்சனங்களுக்குட்பட்ட அம்சம்களும் இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, புதிய சட்டங்கள் காவல்துறையினருக்கு ஏகபோக அதிகாரத்தை வாரிவழங்கியிருக்கிறது. முன்பு காவல்துறையினர் ஒருவரை கைது செய்தால், 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகி போலீஸ் கஸ்டடி கேட்கவேண்டும். ஆனால், இப்போது 15 நாட்கள் என்பது 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, முன்பு ஒரு குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கை (FIR)பதிவுசெய்யப்படும். ஆனால், இப்போது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய 14 நாட்கள் காவல்துறையினருக்கு கால அவகாசம் வழங்குகிறது இந்த புதிய சட்டம். இதுமட்டுமல்லாமல், காவல்துறை உயரதிகாரியே ஒருவரை பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யலாம்’ என இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகிறார்.

என்னங்க சார் உங்க சட்டம்!?

மேலும், “இந்த புதிய சட்டத்தில் தேசத்துரோக (Sedition) வழக்கு என்பது நீக்கப்பட்டிருந்தாலும், அதற்கு மாற்றாக `இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது’ என்ற வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் தெளிவற்று இருப்பதால் கருத்து சுதந்திரம் எந்தவகையில் வேண்டுமானாலும் பாதிக்கப்படும்; முன்பிருந்த தேசத்துரோக சட்டத்துக்குகூட அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்றிருந்தபோது, இந்த புதிய சட்டத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் போராடும் வழக்கறிஞர்கள்.

மேலும், `முன்பு பயங்கரவாத சட்டப்பிரிவான UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த புதிய சட்டத்தின்கீழ், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டாலே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். சாதாரண போராட்டங்களில் ஈடுபடுபவர்களைக்கூட அரசுக்கு எதிராக செயல்பட்டவர் என முத்திரை குத்தி அவருக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படலாம்’ என முன்னாள் நீதிபதிகளும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

இதனால் எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பானது பல மொழிகள் -பல கலாசாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும்” என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன்

அதேபோல வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “ஒன்றிய பா.ஜ.க அரசின் எதேச்சதிகாரபோக்கு வழக்கமான ஒன்றுதான். இந்த அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது. இந்த சட்டங்களின்மீது அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். எனவே, புதிய குற்றவியல் சட்டம் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை கொண்டுவரவேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90-99 சதவீதம் கட், காப்பி, பேஸ்ட் வேலைதான் நடந்திருக்கிறது. தற்போதுள்ள மூன்று சட்டங்களில் சில திருத்தங்களைச்செய்து சுலபமாக முடித்திருக்க வேண்டியதை இப்படி வீண்விரயம் செய்திருக்கிறார்கள். அவை திருத்தங்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன, அவற்றை மட்டும் நாங்கள் வரவேற்கிறோம். மறுபுறம், பல பிற்போக்கு விதிகள் உள்ளன. சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானவை. சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பல கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக மூன்று புதிய சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இது ஆரம்ப காலகட்டத்தில் குற்றவியல் நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும். பின்னர் பல்வேறு நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு பல சவால்கள் ஏற்படும். எனவே, அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

ப.சிதம்பரம்

அதேபோல, தி.மு.க வழக்கறிஞர் அணியும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள் – மாவட்ட அமைப்பாளர்கள் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், `மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாகவும் இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றப்படும் என விவாதிக்கப்பட்டதோடு, ஜூலை 5-ம் தேதி அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக `கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவது, ஜூலை 6-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது’ என மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88