நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம், தங்கம் கொள்ளை; 300 கேமராக்கள் ஆய்வு… ஒரு மாத தேடலில் 6 பேர் கைது!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (40). இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை பாரதி விலாஸ் பகுதியில் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடைகளுக்கு நகைகளை செய்து கொடுத்து அவர்களிடமிருந்து தங்க கட்டிகளாகவும், பணமாகவும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி சுபாஷ் தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்று நகைகளை கொடுத்து விட்டு, 595.14 கிராம் தங்க கட்டிகளையும், நகைகள் விற்ற ரூ.10 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு, குர்லா அதிவிரைவு ரயிலில் பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்துள்ளார்.

ரயில் திருப்பூரில் நின்றபோது, அந்தப் பெட்டியில் வந்த 4 இளைஞர்கள் சுபாஷிடம் வேண்டுமென்றே பிரச்னை செய்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர்களில் சிலர் சுபாஷின் பையில் இருந்த பணத்தையும், நகையையும் திருடியுள்ளனர். கோவைக்குச் சென்ற சுபாஷ் பையைப் பார்த்தபோது, அதில் பணமும், நகையும் இல்லாதது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் ரயில்வே போலீஸில் சுபாஷ் புகார் அளித்துள்ளார்.

கொள்ளை

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தனிப்படை போலீஸார் திருப்பூர் ரயில் நிலையம் மட்டுமல்லாது கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற ரயில் நிலையங்கள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம், கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் சம்பவம் நடந்தபோது டவர் லொகேஷனில் பதிவான தொலைபேசி எண்களையும் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற ரயில்வே போலீஸார், மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வன்பானி சாவன் (22), விஜய் குண்டாலக் ஜாங்கலே (20), அமர்பாரத் நிம்ஹிர் (20), அன்கீத் சுபாஷ்மான் (23), சைதன்யா விஜய் ஷிண்டே (20), கவுரவ் மாரூதி(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

கைது

அவர்களிடமிருந்து 595.14 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.8.46 லட்சம் பணம், திருடப்பட்ட பணத்தில் இருந்து வாங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஆகியவற்றைக் கைப்பற்றினர். தொடர் விசாரணையில் சுபாஷ் நகை தொழில் செய்து வருவதை அறிந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.