அங்கொன்றும் இங்கொன்றுமாக ஸ்கூட்டர்களும் கார்களும்தான் எரிந்து கொண்டிருந்தன. எரிந்து போனவை அநேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது பேருந்துகளும் எரிய ஆரம்பித்து விட்டன என்பது கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கிறது.
நேற்று சென்னை அடையார் பஸ் டிப்போவைச் சேர்ந்த TN01 AN 1569 என்கிற பேருந்து ஒன்று, பிராட்வே பணிமனையிலிருந்து சிறுசேரிக்குச் செல்லும் வழியில் அடையாறு பக்கத்தில் உள்ள LB சாலையில், திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. நல்லவேளையாக – இதில் உயிர்ச்சேதம் இல்லை என்பதும், யாருக்கும் எந்தக் காயங்களும் இல்லை என்பதும் ஆறுதல்.
இது தொடர்பாக, தனது MTC பக்கத்தில் மெட்ரோபாலிடன் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், எக்ஸ் வலைதளத்தில் ஒரு செய்தியைப் பதிவு செய்திருந்தது. “தீயணைப்பு ஊழியர்கள் மூலம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டது. பேருந்து ஏன் தீப்பிடித்தது என்பதற்கான காரணங்களை ஆராய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது!” என்றும் அந்தப் பதிவில் சொல்லியிருந்தது MTC.
பொதுவாக, எலெக்ட்ரிக் வாகனங்கள்தானே அங்கங்கே எரியும் என்று ஆசுவாசப்பட முடியவில்லை. காரணம், இங்கே எரிந்து போனது ஒரு CNG (Compressed Natural Gas) பஸ். டீசல் இன்ஜினோடு சிஎன்ஜியாக கன்வெர்ஷன் செய்யப்பட்ட பேருந்து அது. Torrent Gas என்கிற வாயு எரிபொருள் சப்ளை நிறுவனத்தின் மூலமாக, சிஎன்ஜி கன்வெர்ஷன் செய்யப்பட்டிருக்கிறது அந்தப் பேருந்து. மொத்தம் 4 பேருந்துகளை இதுபோல் கன்வெர்ஷன் செய்து, ஓட்டம் பார்த்திருக்கிறார்கள். அதில் ஒரு பேருந்துக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது கொஞ்சம் திகிலான விஷயமாகத்தான் இருக்கிறது.
“இப்படி பஸ்ஸும் எரிஞ்சா நாங்க எதுலதான் போறது?” என்றார் ஒரு பொதுப் போக்குவரத்துப் பயனாளி ஒருவர்.
பொதுவாக, ஒரு டீசல் பஸ் சுமார் 4 கிமீ வரை மைலேஜ் தரும். ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய். டீசல் பேருந்துகளுக்கு ஒரு கிமீ-க்கு 23 ரூபாய் செலவழியும். இதுவே சிஎன்ஜி பேருந்தும் கிட்டத்தட்ட அதே மைலேஜ்தான் என்றாலும், சிஎன்ஜியின் ஆப்பரேட்டிங் காஸ்ட் என்பது குறைவே! ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை 75 – 77 ரூபாய். அதாவது இதில் ஒரு கிமீ-க்கு 16 ரூபாய்தான் ஆகும். அதனால், அரசுக்கு எப்படியாச்சும் சிஎன்ஜி பேருந்துகளை ஓட்டி பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்க்க ஆசை! அதனால்தான் டீசல் பேருந்துகளை, தனியார் நிறுவனம் மூலம் கன்வெர்ஷன் செய்திருக்கிறார்கள். டீசல் இன்ஜினும் பெட்ரோல் இன்ஜினும் செயல்படும் முறை வித்தியாசமாக இருக்கும்.
இங்கே இன்னொரு விஷயமும் பார்க்க வேண்டும். பேருந்து தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் நினைத்தால் அரசாங்கத்துடன் கைகோர்க்கலாம். சாதாரணமாக ஒரு பேருந்தின் விலை 60 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இதுவே சிஎன்ஜி-யை ஃபேக்டரி ஃபிட்டட் ஆக, அதாவது நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜி பேருந்தாக வாங்க வேண்டும் என்றால், எக்ஸ்ட்ரா 30 – 35 லட்ச ரூபாய் செலவழியும். இதனால், டீசல் பேருந்துகளில் குறைந்தபட்ச விலைக்கு சிஎன்ஜி கன்வெர்ஷன் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
2005 வாக்கில் டெல்லியில் இதுபோல் சிஎன்ஜி கன்வெர்ஷன் செய்யப்பட்ட பேருந்துகள் அடிக்கடி எரிந்து போக, டெல்லி கார்ப்பரேஷனை மானாவாரியாகக் கேள்வி கேட்டது நீதிமன்றம். முறையான ICAT (International Centre for Automotive Technology) -யின் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதல் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இப்போது உலகத்திலேயே அதிகமாக சிஎன்ஜி பேருந்துகள் ஓடும் நாடு இந்தியா; மாநிலம் டெல்லி!
ஒண்ணு – காசு போனா போகட்டும் என்று எக்ஸ்ட்ரா காசு போட்டு ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி பஸ்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், நம் ஊரிலும் சட்டதிட்டங்களையும், சிஎன்ஜிக்கான பாதுகாப்பு நடைமுறைகளும் மேம்படுத்த வேண்டும். ஏதோ ஒண்ணு – தரமான கன்வெர்ஷன்கள் தேவை என்பதுதான் இங்கே விஷயம். அப்போதான் மக்களுக்குப் பாதுகாப்பு!