‘மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்..!’ – ப.சிதம்பரம் கிளப்பிய சர்ச்சையும் பின்னணியும்!

மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை?. 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?. இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ப.சிதம்பரம்

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆண்டுதோறும் தோராயமாக 5 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன.

மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது. மிதிவண்டிகளை கிண்டியில் உள்ள சிடிஏஎல் (Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக பரிசோதனை (Destructive Test) செய்யப்பட்டு தர அறிக்கைy Test R (Qualiteport) பெறப்படுகிறது. அதன் பின்னரே நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதிவண்டிகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இச்செலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தய்து அறிக்கை அளித்துள்ளார். அவ்வறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், நல்ல நிலையில் அதனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனவும் மிதிவண்டிகளை தனியார்களுக்கு விற்பனை செய்ததாக மாணவர்களால் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடையில் ஆய்வு செய்யப்பட்டதில், அங்கிருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், பழுது நீக்கம் செய்யப்பட்டவுடன் மாணவர்கள் பெற்றுச் செல்வர் என்றும், அவை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டவை அல்ல என்று தெரிய வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் சில இடங்களில் இலவச சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகிறது என்கிற தகவலும் வெளியானது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், “தரமற்ற சைக்கிள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ‘சிடிஏஎல் (Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். தரத்தில் உறுதியாக அரசு இருக்கும் பட்சத்தில் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டியதுதானே.. அதை ஏன் செய்யவில்லை.

ராதாகிருஷ்ணன்

அதேபோல் எவ்வளவு தொகைக்கு வாங்கினோம் என்கிற தகவலும் இல்லை. முன்பு கூடுதல் விலைக்கு சைக்கிள் கொள்முதல் செய்ததாக சர்ச்சை வெடித்தது. எனவேதான் இந்த முறை கொள்முதல் விலை தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மேலும் சைக்கிள் கொள்முதல் குறித்து எந்த தகவலும் அரசின் இணையதளத்திலும் வெளிப்படையாக இல்லை. ஆகவே அறிக்கைகள் மூலம் மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சைக்கிள் கொள்முதல் விலை, எதன் அடிப்படையில் நிறுவனங்களை தேர்வு செய்தார்கள் என்கிற விவரத்தை வெளியிட வேண்டும். அதுதான் உண்மையான மறுப்பு செய்தியாக இருக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88