`தாக்கரே முதல்வர் வேட்பாளரா? டு சரத் பவாரிடம் திரும்பும் கவுன்சிலர்கள்’ – மகாராஷ்டிரா பாலிடிக்ஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்து, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட இருக்கிறது.

இக்கூட்டணியில் மூன்று கட்சிகளும் சமபலத்துடன் இருக்கிறது. இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உத்தவ் தாக்கரே கட்சியும், மேற்கு மகாராஷ்டிராவில் சரத் பவார் கட்சியும், விதர்பா மற்றும் மராத்வாடாவில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன. இக்கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. உத்தவ் தாக்கரேயை முதல்வர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரப் பவார், “எங்களது கூட்டணி என்பது ஒருங்கிணைந்த முகத்தை கொண்டது. ஒருவரது முகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருங்கிணைந்த தலைமைதான் எங்களது கொள்கை” என்றார்.

உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று கேட்டதற்கு, “ஒருங்கிணைந்த தலைமைதான் எங்களது முகம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். கூட்டணி கட்சிகள் தங்களிடம் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு தங்களது ஒதுக்கீட்டில் இருந்து தொகுதிகளை ஒதுக்கவேண்டும். மக்களைவை தேர்தல் வெற்றிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முக்கிய பங்காற்றின” என்று தெரிவித்தார்.

சரத் பவாரின் கருத்து குறித்து சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, “சரத் பவார் சொல்வது சரிதான். மகாவிகாஷ் அகாடி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக அறிவித்து இருந்தால் கூடுதலாக 25-30 தொகுதிகள் கிடைத்து இருக்கும். எந்த ஒரு அரசு அல்லது நிறுவனம் தலைமை இல்லாமல் இருக்கூடாது என்பது எங்களது கருத்து. மகாவிகாஷ் அகாடி மூன்று கட்சிகளை கொண்டது. மக்களவை தேர்தலில் இக்கூட்டணி எப்படி வென்றது என்பதை அனைவரும் பார்த்துள்ளனர். சட்டமன்ற தேர்தலும் மூன்று கட்சிகளும் இணைந்து 180 தொகுதிகள் வரை வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்

சிவசேனா(உத்தவ்) சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிட்டது. ஆனால் அம்முயற்சிக்கு சரத் பவார் தடையாக அமைந்துள்ளார். சரத் பவார் கட்சியும் 100 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டுள்ளது. எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அக்கட்சியை சேர்ந்தவரை முதல்வராக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு முதல்வர் பதவி கிடைக்காத பட்சத்தில் தனது மகன் ஆதித்ய தாக்கரேயை துணை முதல்வராக்கவும் உத்தவ் தாக்கரே தயாராகி வருகிறார். சரத் பவாரும் தனது மகள் சுப்ரியா சுலே முதல்வர் அல்லது துணை முதல்வராக்கும் முடிவில் இருக்கிறார். கட்சியில் சுப்ரியாவிற்கு போட்டியாக இருந்த அஜித் பவார் கட்சியை உடைத்துக்கொண்டு தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறார். அஜித் பவார் கட்சி மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தது.

இதனிடையே புனேயில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 முன்னாள் கவுன்சிலர்கள் சரத்பவாரை சந்தித்து மீண்டும் தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இருந்தனர். பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 38 கவுன்சிலர்கள் இருந்தனர். கட்சி உடைந்த போது அஜித்பவாருடன் 36 பேர் சென்றுவிட்டனர். இரண்டு பேர் மட்டுமே சரத் பவாருடன் இருந்தனர். இப்போது 16 பேர் திரும்ப வந்துள்ளனர். சரத்பவார் தினமும் 3 மணி நேரம் கட்சி தொண்டர்களையும், கட்சிக்கு திரும்ப வர நினைப்பவர்களையும் சந்தித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88