அமலுக்கு வந்தன `புதிய குற்றவியல் சட்டங்கள்’ – மக்கள் அறிய வேண்டியவை என்னென்ன?!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில், இந்தச் சட்டங்களின்படி முதல் வழக்கு டெல்லியில் இன்று பதிவுசெய்யப்பட்டது. டெல்லியில் கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் வீதியோர வியாபாரி ஒருவர் மீது அந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மோடி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியிருக்கிறது. இவற்றுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன.

சமஸ்கிருதத்தில் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, புதிய சட்டங்களால் பல குழப்பங்கள் உருவாகும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் என்று பல விமர்சனங்கள் புதிய குற்றவியல் சட்டங்கள் மீது உண்டு. அதே நேரத்தில், மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கின்றன.

நாடாளுமன்றம்

உதாரணமாக, ‘பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை’ என்ற அம்சம். இதன்படி, குற்றம் எங்கு நிகழ்ந்ததோ, அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்ய முடியும். மேலும், காவல்நிலையத்துக்கு நேரில் சென்றுதான் புகார் தர வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. காவல்துறையிடம் இணைய வழயில் புகார்களைப் பதிவு செய்யலாம்.

குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், கொடிய குற்றங்கள் அனைத்திலும் குற்றம் நிகழ்ந்த இடத்தை கட்டாயம் வீடியோ பதிவு செய்தல் போன்ற அம்சங்களும் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

‘குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளிலிருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழக்கப்பட வேண்டும். அதேபோல, அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளிலிருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்’ என்ற அம்சங்கள் இதில் முக்கியமானவை.

குற்றவியல் சட்டங்கள்

புதிய குற்றவியல் சட்டங்களின்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலத்தை, அவர்களின் பாதுகாவலர்கள் முன்னிலையில் பெண் காவல்துறை அதிகாரி பெறுவார். அநதப் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும். குழந்தை விற்பனை கொடிய குற்றமாக்கப்பட்டு, 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வழிவகுக்கப்பட்டிருக்கிறது.

தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வது கடுமையான குற்றமாக்கப்பட்டிருக்கிறது. பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு வாயிலாக வாக்குமூலம் அளிக்கலாம். சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டர்கள், நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு ஊடகம் மூலமாக ஆஜராக முடியும். காவல்துறை விசாரணை முதல் நீதிமன்ற நடவடிக்கை வரை முழு செயல்முறையும் கணினிமயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக பல நவீன நடைமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

காவல் நிலையம்

போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் அவகாசம் 15 நாள்களுக்கு மேலாக நீடிக்கப்பட்டிருக்கிறது. சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தவும் புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு குற்றவியல் தொடர்பாக புதிதாக பல அம்சங்களுடன் மூன்று சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், அவற்றுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்குகி இருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88