Parliament: `கள்ளச்சாராய மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும்!’ – அனுராக் தாக்கூர்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. 6-வது நாளான இன்று இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தினர். அப்போது ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

ராகுல் காந்தி – ஓம் பிர்லா

நீட் முறைகேடு தொடர்பான விவாதத்துக்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தி மைக் இணைப்பை தான் துண்டிக்கவில்லை என்றும், அதற்கான ஸ்விட்ச் தன்னிடம் இல்லை என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நீட் விவகாரம் நாடாளுமன்றத்துக்கு முக்கியம். நாடாளுமன்றத்திலிருந்து நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் அது தொடர்பான செய்திகளைப் பேசவேண்டும்.

எனவே, நீட் முறைகேடுகள் குறித்து ஒருநாள் விவாதிக்க வேண்டும் என்கிறோம்” எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாடாளுமன்ற கூட்டம் சில மரபுகள், விதிகளின்படிதான் நடைபெறுகிறது. அதை மீறமுடியாது” என்றார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நீட் விவகாரம் குறித்து விவாதிக்க முறையிட்டனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதும், எதிர்க்கட்சி எம்.பி-கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் பேசினார்.

அனுராக் தாக்கூர்

“ராகுல் காந்தி இத்தனை ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாமலே அதை அனுபவித்து வந்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அதிகாரத்தை பெற்றிருக்கிறார். இனியாவது நாடாளுமன்றத்தில் உட்காருவாரா என அவரிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால் அவர் அவையில் இல்லை. மக்கள் மூன்றாவது முறையாக அரசியல் சாசனத்துக்கு எதிரானவர்களை எதிர்க்கட்சி பெஞ்சில் அமர வைத்திருக்கிறார்கள். இந்தியா ஒரு காலத்தில் பல்வீனமான பொருளாதாரமாக இருந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லை. மூன்றுமுறை கடுமையாக முயன்றும் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களைக் கூட பெறமுடியவில்லை. 99 இடங்களிலேயே சிக்கிக் கொண்டது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் பலியாகியிருக்கின்றானர்.

தயாநிதி மாறன்

அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும். அதுவரை அவர்கள் பேசவே கூடாது” எனத் தெரிவித்தார். அப்போது பா.ஜ.க கூட்டணி எம்.பி-க்கள் ‘வெட்கம் வெட்கம் வெட்கம்’ என முழக்கமிட்டனர். அனுராக் தாக்கூர் பேசிக் கொண்டிருந்த போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுந்து, நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். அப்போதும் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் லோக் சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.