விருந்தினர்களுக்கு ரூ.66,000 ரொக்கம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம்; அம்பானியை மிஞ்சும் சீனத் திருமணம்!

சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12-ம் தேதி ராதிகா மெர்ச்சென்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. குஜராத்தில் நடைபெற்ற அந்த மூன்று நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.1,250 கோடி செலவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

சீனத் திருமணம்

திருமண தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அழைப்பிதழ் வழங்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கோயில் வடிவமைப்பு, தங்க மூலாம் பூசிய கடவுள் சிலைகள் என ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண அழைப்பிதழை அனைவரும் வியக்கும் அளவிற்கு வடிவமைத்திருக்கின்றனர்.

இப்படி அம்பானி வீட்டுத் திருமணம் இணையத்தில் ஒருபுறம் வைரலாக, அதற்கு இணையாக சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த சீனத் தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவரையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்திருக்கின்றனர். மேலும் அங்கிருப்பவர்கள் வெளியே எங்கேயாவது சுற்றிப் பார்க்க விரும்பினால், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி போன்ற சொகுசு காரில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் அங்குச் செய்யப்பட்ட ஆடம்பரமான திருமண அலங்காரமானது ஆசியாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு இருந்திருக்கிறது. டெலிபோன் பூத் முதல் அனைத்துமே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால் கல்யாணத்திற்கு வந்த ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் 66,000 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.